இலங்கை கிரிக்கெட் சபையின் புதிய யாப்பிற்கான சட்டமூலம் ஜனாதிபதியிடம் கையளிப்பு
இலங்கை கிரிக்கெட் நிறுவனத்துக்கான புதிய யாப்பை உருவாக்குவதற்காக நியமிக்கப்பட்ட குழுவினால் தயாரிக்கப்பட்ட சட்டமூலம் வரைவு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் இன்று கையளிக்கப்பட்டது.
இந்தக் குழுவின் தலைவர் ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதியரசர் கே.டி. சித்ரசிறியினால் குறித்த சட்டமூல வரைவு ஜனாதிபதி செயலகத்தில் வைத்து ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.
ஸ்ரீங்கா கிரிக்கட் எதிர்நோக்கும் பிரச்சினைகளை கண்டறிந்து அது தொடர்பான பரிந்துரைகளை வழங்குவதற்காக கடந்த 2023 ஆம் ஆண்டு நவம்பர் 6 ஆம் திகதி அமைச்சரவை உபகுழுவொன்று நியமிக்கப்பட்டது.
வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தலைமையிலான இந்த குழுவில் மின்சக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர, தொழில் அமைச்சர் மனுஷ நாணயக்கார பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் ஆகியோரும் உள்ளடங்கியிருந்தனர்.
இந்த குழுவினர் கிரிக்கெட்டுடன் தொடர்புடைய அனைத்து தரப்பினருடனும் கலந்துரையாடிய பின்னர் தமது அறிக்கையை கடந்த ஜனவரி 8 ஆம் திகதியன்று அமைச்சரவைக்கு சமர்ப்பித்தது.
தேசிய ஆடவர் மற்றும் மகளிர் அணிகள் உட்பட பல்வேறு நிலைகளில் உள்ள வீரர்கள் தொடர்பான நிர்வாகம், பயிற்சி மற்றும் ஒட்டுமொத்த நல்வாழ்வு பற்றிய சில பரிந்துரைகள் குறித்த அறிக்கையில் முன்வைக்கப்பட்டுள்ளன.
அத்தடன் ஸ்ரீலங்கா கிரிக்கெட்டின் அமைப்பு மற்றும் கட்டமைப்பை மறுசீரமைப்பது குறித்தும் அதில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.
அதன்படி இலங்கை கிரிக்கெட் நிறுவனத்துக்கான புதிய யாப்பொன்றை உருவாக்குவதற்காக, கடந்த பெப்ரவரி மாதம் 13ஆம் திகதி நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில், அமைச்சரவை உபகுழுவின் பரிந்துரைகளுக்கு அமைய ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதியரசர் கே.டி. சித்ரசிறி தலைமையில் குழுவொன்று நியமிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது
000