இலங்கை முன்னேற இதுவே இறுதிச் சந்தர்ப்பம் - ஜனாதிபதி
இலங்கையை முன்னோக்கி கொண்டு செல்வதற்கு இதுவே கடைசி சந்தர்ப்பம் எனவும், பரஸ்பரம் குற்றம் சுமத்தாமல் அடுத்த தலைமுறைக்கு சுபீட்சமான சமூகத்தை கட்டியெழுப்ப அனைவரும் ஒன்றிணைய வேண்டும் எனவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வலியுறுத்தினார்.
கொழும்பு கோல்பேஸ் ஹோட்டலில் இன்று (30) முற்பகல் நடைபெற்ற “IMF மற்றும் அதற்கு அப்பால்” கலந்துரையாடலில் பிரதான உரையை ஆற்றிய போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.
இலங்கை பட்டயக் கணக்காளர் நிறுவகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட பிரதம நிறைவேற்று அதிகாரி கலந்துரையாடலில் கலந்து கொண்டு உரையாற்றிய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்கள், சர்வதேச நாணய நிதியத்தின் திட்டத்திற்கு அப்பால் சென்று அடுத்த தலைமுறைக்கு வளமான சமூகத்தை உருவாக்குவதில் கவனம் செலுத்த வேண்டும் என்றும் அரசாங்கம் அதில் உறுதியாக இருப்பதாகவும் தெரிவித்தார்.
டி.எஸ். சேனாநாயக்கவின் முன்மொழிவுகளுக்கு அமைய செயற்படாதது மற்றும் 1965 ஆம் ஆண்டு ஷெனோய் அறிக்கையை அமுல்படுத்தாதது உட்பட அபிவிருத்தியை அடைவதற்கான வாய்ப்புகளை இலங்கை தவறவிட்டதை நினைவுகூர்ந்த ஜனாதிபதி, 1978 இனப்பிரச்சினையால் நாட்டின் முன்னேற்றம் மந்தமடைந்ததாகவும், அதன் மூலம் நாட்டில் மீண்டும் அபிவிருத்திக்கான அடித்தளத்தை மேற்கொள்வதற்கான சந்தர்ப்பத்தை இழந்ததாகவும் தெரிவித்தார்.
இனப்பிரச்சினையை பிரதான பொருளாதாரப் பிரச்சினையிலிருந்து பிரிக்க முடியாது எனவும், நாடு அபிவிருத்தியடைய வேண்டுமானால் அதற்குத் தீர்வு காணப்பட வேண்டும் எனவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வலியுறுத்தினார்.