கிடைத்த அனைத்து வாய்ப்புகளையும் தவறவிட்டுள்ளோம் - புதிய பொருளாதாரத்தை நோக்கி செல்லாவிட்டால் மீண்டும் நாம் படுகுழியில் விழுந்து விடுவோம் – ஜனாதிபதி ரணில் எச்சரிக்கை
தொழில் அமைச்சராக தாம் பதவிவகித்தபோது வியட்நாம் நாட்டின் தொழில் அமைச்சர் தம்மை சந்தித்து நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கு ஆலோசனை பெற்றதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
பொரலஸ்கமுவையில் இடம்பெற்ற அகில இலங்கை தனியார் மருந்தக உரிமையாளர்கள் சங்கத்தின் 09 ஆவது மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து உரையாற்றிய ஜனாதிபதி ;
"நாங்கள் எமது நாட்டில் ஒரு ஏற்றுமதித் தொழிற்துறைய உருவாக்கவில்லை. வாய்ப்புகள் இருந்தும் அந்த வாய்ப்புகளை நாங்கள் தவறவிட்டோம்.
1979 இல் நான் சீனாவுக்குச் சென்றபோது, சீனா நம்மைவிட ஏழ்மையான நாடாக இருந்தது. இப்போது சீனா நமக்கு பணம் தருகிறது.
1991 இல் நான் தொழில்துறை அமைச்சராக இருந்தபோது வியட்நாமின் தொழில்துறை அமைச்சர் என்னைச் சந்தித்தார்.
உங்களுக்கு எப்படி முதலீடுகள் வந்தன, எப்படி அன்னியச் செலாவணி கிடைத்தது, வர்த்தக வலயங்களை எப்படி உருவாக்கினீர்கள் என என்னிடம் கேட்டு ஆலோசனை கேட்டார். ஆனால், இப்போது நான் வியட்நாம் சென்றால் அவர் சொல்வதைக் கவனிக்க வேண்டும்.
கிடைத்த அனைத்து வாய்ப்புகளையும் தவறவிட்டோம். இதை சரிசெய்து புதிய பொருளாதாரத்தை நோக்கி செல்லாவிட்டால், மீண்டும் ஒரு நாடாக நாம் படுகுழியில் விழுந்து விடுவோம்'' என தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது
000