கள்ளக்குறிச்சி விவகாரம் : பிள்ளைகளின் கல்வி செலவை அரசே ஏற்கும் – ஸ்டாலின்
விஷ சாராயத்தால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கான உயர்கல்வி வரையிலான செலவுகளை அரசே ஏற்கும் என தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டசபையில், கள்ளக்குறிச்சி விஷச்சாராய விவகாரம் தொடர்பான கவன ஈர்ப்பு தீர்மானங்கள் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இதனை குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்து உரையாற்றிய அவர், “விஷச்சாராயம் அருந்தி உடல்நலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
விழுப்புரம், சேலம், திருச்சி, செங்கல்பட்டிலிருந்து 57 வைத்தியர்கள கள்ளக்குறிச்சி வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். மருந்துகள் தேவைப்பட்டால் வெளிச்சந்தையில் வாங்கி, பயன்படுத்தப்பட்டு வருகின்றன. மெத்தனால் கலந்து சாராயத்தை அருந்தி உடல் நலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு, உரிய சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது. விஷச் சாராயம் புதுச்சேரியில் இருந்து கொண்டு வரப்பட்டுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
சாராயத்தை விற்றவர்களிடம் இருந்து 200 லீற்றர் மெத்தனால் கைப்பற்றப்பட்டுள்ளது. அத்துடன் கள்ளக்குறிச்சி விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. விஷ சாராயத்தால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு உயர்கல்வி வரையிலான செலவுகளை அரசே ஏற்கும்.
பெற்றோர் இருவரையும் இழந்த குழந்தைகளுக்கு 18 வயது வரை மாதந்தோறும் 5 ஆயிரம் ரூபா வழங்கப்படும். பெற்றோரில் ஒருவரை இழந்திருந்தால் 3 இலட்சம் ரூபா வைப்பு நிதி அளிக்கப்படும். அவர்களின் வங்கிக்கணக்கில் 5 இலட்சம் ரூபா வைப்பு நிதி அளிக்கப்படும். 18 வயது நிரம்பியதும் வட்டியுடன் தொகை அளிக்கப்படும். விசாரணை அறிக்கை அடிப்படையில் நடவடிக்கைகளை துரிதப்படுத்துவேன் என உறுதி அளிக்கிறேன்.
கள்ளக்குறிச்சி சம்பவம் தொடர்பாக வழக்கை சிபிசிஐடியிடம் ஒப்படைக்க உத்தரவிட்டுள்ளேன்” என தனது உரையில் குறிப்பிட்டுள்ளார்.