பாகிஸ்தானுடனான டெஸ்ட் தொடரை முழுமையாக வென்றது தென்னாபிரிக்கா
பாகிஸ்தானுக்கு எதிரான இரண்டாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியில் 10 விக்கெட்டுகளால் வெற்றியீட்டிய தென்னாபிரிக்க அணி தொடரை 2 - 0 என முழுமையாக கைப்பற்றியது.
கேப் டவுனில் நடைபெற்ற இந்த டெஸ்ட் போட்டியின் நான்காவது நாளான நேற்று முன்தினம் (06) இன்னிங்ஸ் தோல்வியை தவிர்ப்பதற்கு 421 ஓட்டங்களை பெற வேண்டிய நிலையில் தனது இரண்டாவது இன்னிங்ஸை தொடர்ந்த பாகிஸ்தான் அணி 122.1 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 478 ஓட்டங்களை பெற்றது.
அணித் தலைவர் ஷான் மசூத் (145) மற்றும் பாபர் அஸாம் (81) ஆகியோர் ஆரம்ப விக்கெட்டுக்கு 205 ஓட்டங்களை பகிர்ந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் தென்னாரிக்க அணிக்கு 58 ஓட்டங்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்ட நிலையில் அந்த அணி நான்காவது நாளின் கடைசி நேரத்தில் தனது இரண்டாவது இன்னிங்ஸை ஆரம்பித்து 7.1 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 61 ஓட்டங்களை பெற்று வெற்றியீட்டியது.
முன்னதாக தென்னாபிரிக்க அணி முதல் இன்னிங்ஸில் 615 ஓட்டங்களை பெற்றதோடு பாகிஸ்தான் அணி தனது முதல் இன்னிங்ஸில் 194 ஓட்டங்களுக்கே சுரண்டது.
இது தென்னாபிரிக்க அணி டெஸ்ட் போட்டிகளில் பெறும் தொடர்ச்சியான ஏழாவது வெற்றி என்பதோடு உலக டெஸ்ட்; சம்பியன்சிப் புள்ளிப் பட்டியலில் முதல் இடத்தை உறுதி செய்தது. தென்னாபிரிக்க அணி எதிர்வரும் ஜூன் மாதம் நடைபெறும் உலக டெஸ்ட் சம்பியன்சிப் இறுதிப் போட்டியில் நடப்புச் சம்பியன் அவுஸ்திரேலியாவை எதிர்கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.