இலங்கைக்கு போதிய டெஸ்ட் போட்டிகள் கிடைக்கவில்லை - மத்தியூஸ் பெரும் அதிருப்தி!
இலங்கை அணிக்கு போதிய டெஸ்ட் போட்டிகள் இல்லாதது குறித்து அனுபவ சகலதுறை வீரர் அஞ்சலோ மத்தியூஸ் அதிருப்தி வெளியிட்டுள்ளார்.
சர்வதேச கிரிக்கெட் கௌன்சிலையும் ‘டெக்’ செய்து எக்ஸ் சமூக தளத்தில் வெளியிட்டிருக்கும் பதிவில் மத்தியூஸ் குறிப்பிட்டிருப்பதாவது,
‘இந்த மாதம் இடம்பெறும் அவுஸ்திரேலிய டெஸ்ட் போட்டிகள் உட்பட இந்த ஆண்டு முழுவதிலும் இலங்கை வெறும் 4 டெஸ்ட் போட்டிகளில் ஆடவுள்ளதை கேட்டு உண்மையில் அதிர்ச்சி அடைகிறேன்.’
இலங்கை அணி அவுஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டு போட்டிகளைக் கொண்ட டெஸ்ட் தொடருடன் இந்த ஆண்டை ஆரம்பித்தபோதும் ஐந்து மாத இடை வெளியின் பின்னர் பங்களாதேஷுக்கு எதிரான இரண்டு டெஸ்ட் போட்டிகளில் ஆடவுள்ளது. இந்த நான்கு போட்டிகளுமே இலங்கை அணி இந்த ஆண்டில் ஆடும் டெஸ்ட் போட்டிகளாக உள்ளன.
இதனைத் தொடர்ந்து இலங்கை அணியின் அடுத்த டெஸ்ட் போட்டி 12 மாத இடைவெளியில் 2026 நடுவிலேயே அட்டவணைப்படுத்தப்பட்டுள்ளது.
2026 ஆம் ஆண்டிலும் இலங்கை அணிக்கு போதுமான போட்டிகள் இல்லை. அடுத்த ஆண்டு ஜூனில் மேற்கிந்திய தீவுகளுக்கு எதிராகவும் ஓகஸ்டில் இந்தியாவுக்கு எதிராகவும் தலா இரண்டு டெஸ்ட் போட்டிகளில் ஆடும் இலங்கை அணி ஒக்டோபர் மற்றும் நவம்பருக்கு இடையே பாகிஸ்தானுக்கு எதிராக இரண்டு டெஸ்ட் போட்டிகளில் ஆடும்.
இதன்படி 2026 ஆம் ஆண்டிலும் இலங்கை அணி மொத்தமாக ஆறு டெஸ்ட் போட்டிகளிலேயே ஆடவுள்ளது.
இந்நிலையில் 37 வயதாகும் மத்தியூஸ் இலங்கை டெஸ்ட் அணியின் நிரந்தர வீரராக இடம்பெற்று வரும் நிலையில் தனது கிரிக்கெட் வாழ்வின் இறுதிக் கட்டத்தில் போதிய டெஸ்ட் போட்டிகள் இல்லாத நெருக்கடியை எதிர்கொண்டுள்ளார்.
இதனால் குமார் சங்கக்கார (12,400) மற்றும் மஹேல ஜயவர்தனவுக்கு (11,814) அடுத்து 10,000 டெஸ்ட் ஓட்டங்களை பெற்ற மூன்றாவது இலங்கை வீரராக இடம்பெறும் அவரது வாய்ப்பு தற்போது குறைந்துள்ளது. இதுவரை 116 டெஸ்ட் போட்டிகளில் ஆடி இருக்கும் மத்தியூஸ் 16 சதம் மற்றும் 44 அரைச்சதங்களுடன் 8042 ஓட்டங்களை பெற்றுள்ளார். அவர் 10,000 ஓட்ட மைல்கல்லை எட்டுவதற்கு இன்னும் 1958 ஓட்டங்களை பெற வேண்டி உள்ளது.
இது தொடர்பில் அண்மையில் ஆங்கில பத்திரிகை ஒன்றுக்கு பேட்டி அளித்த மத்தியூஸ், - ‘போதுமான டெஸ்ட் போட்டிகள் இல்லாதது பெரும் ஏமாற்றத்தைத் தருகிறது. டெஸ்ட் போட்டிகளுக்கு இடையே ஓர் ஆண்டு காத்திருக்க வேண்டி ஏற்பட்டிருப்பது உண்மையில் கவலை அளிக்கிறது.
கிரிக்கெட் என்பது சீரான ஆட்ட போக்கைக் கொண்டது. நீண்ட இடைவெளியை எடுப்பது அதனை சீர்குலைப்பதோடு வீரர்கள் மற்றும் அவர்களின் கிரிக்கெட் வாழ்வை பாதிக்கும். ஐ.சி.சி. மற்றும் இலங்கை கிரிக்கெட் சபை இது பற்றி அவதானம் செலுத்தி நியாயமான போட்டி அட்டவணையை தரும் என்று எதிர்பார்க்கிறேன்.
(10,000 ஓட்ட) இலக்கை எட்டுவதை நான் இன்னும் கைவிடாதபோதும், அது எனது ஆட்டம் மற்றும் உடல் தகுதியில் தங்கியுள்ளது. ஆனால் போதிய அளவு டெஸ்ட் போட்டிகள் இல்லாதது எனக்கு உதவியாக இருக்காது’ என்று குறிப்பிட்டார்
000