கொள்கைகளின் அடிப்படையிலேயே நாட்டை முன்னேற்ற முடியும் - இராஜாங்க அமைச்சர் அநூப பஸ்குவெல்
நாட்டு மக்களின் போராட்டத்தில் வலியுறுத்தப்பட்ட சீர்திருத்தங்களை தற்போதைய அரசாங்கம் வெற்றிகரமாக மேற்கொண்டு வருவதாக சமூக வலுவூட்டல் இராஜாங்க அமைச்சர் அநூப பஸ்குவெல் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி ஊடக மையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்
கொள்கைகளின் அடிப்படையிலேயே நாட்டை முன்னேற்ற முடியுமே தவிர தனிநபர்கள் அல்லது கட்சிகளினால் அதனைச் செய்ய முடியாது எனவும் அத்தோடு, சிறுதேயிலைத் தோட்ட உரிமையாளர்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு 50 வீத நிவாரணம் வழங்க ஜனாதிபதி அனுமதியளித்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
பலரும் அரசாங்கத்தின் வேலைத்திட்டத்தினை ஏற்றுக்கொண்டுள்ள போது, சிலர் மாத்திரம் அதற்குப் புறம்பாகச் செயற்படுவதாகவும் அவர் கூறியுள்ளார்.
யார் எவ்வாறான அறிக்கைகளை வெளியிட்டாலும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் கொண்டுவரப்பட்ட சீர்திருத்தங்கள் வெற்றி அடைந்துள்ளது உண்மை எனவும் அவர் கூறியுள்ளார்.
இதேவேளை, அரசாங்கம் நலன்புரித் திட்டங்களை ஆரம்பித்தபோது 35 வீதமாக இருந்த வட்டி விகிதம் இன்று 12 வீமாகக் குறைந்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இவ்வாறான நிலையில் சிறுதேயிலைத் தோட்ட உரிமையாளர்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண 50 சதவீத நிவாரணத்தை வழங்க ஜனாதிபதி அனுமதி வழங்கியுள்ளதுடன், அதற்கு 1.2 பில்லியன் ரூபா தேவைப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, பெண்களை வலுவூட்டுவதற்கான சட்டமூலம் விரைவில் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்படவுள்ளதுடன், பெண்கள் வலுவூட்டலுக்கான ஆணைக்குழு ஒன்றும் அமைக்கப்படவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் அநூப பஸ்குவெல் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
000