விரைவில் நாடாளுமன்றத் தேர்தல் – புதிய ஜனாதிபதி அனுர
தற்போது தமக்கு வழங்கப்பட்டுள்ள மக்கள் ஆணையை நிலை நிறுத்துவதற்காக விரைவில் நாடாளுமன்றத் தேர்தல் நடத்தப்படும் என அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதித் தேர்தல் தொடர்பான இறுதி அறிவிப்பை வெளியிடும் விசேட செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டார்.
எமது நாடு பொருளாதார, அரசியல் சமூக மற்றும் சர்வதேச ரீதியாக ஸ்திரமற்ற நிலையில் உள்ளது.
வீழ்ச்சியடைந்துள்ள நாட்டை முன்னோக்கிக் கொண்டு செல்வதற்கான நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படுவது மக்களின் விருப்பத்திற்கேற்ப தெரிவு செய்யப்பட்ட அரசாங்கத்தினால் மாத்திரமே முடியும் என்பது நம்பிக்கையாகும்.
எந்தவொரு அரசாங்கத்திற்கும் மக்களின் விருப்பமே சக்தியாகும் என்பதுடன் வழிகாட்டல்களாகும். கடந்த காலங்களில் மக்கள் ஆணை திரிபுபடுத்தப்பட்டிருந்தது.
நாட்டை முன்னோக்கிக் கொண்டு செல்ல வேண்டுமாயின் மக்கள் ஆணையை மீண்டும் நிலைநிறுத்த வேண்டும்.
இந்தநிலையில், மக்கள் ஆணையை நிலை நிறுத்துவதற்காக விரைவில் நாடாளுமன்றத் தேர்தல் நடத்தப்படுவதற்கான வாய்ப்பு உள்ளது.
தேர்தல் நடைபெறும் முறைமை தேர்தலில் வெற்றி பெற்ற பின்னர் அதனைக் கொண்டாடும் விதமும் மாற்றமடைய வேண்டும்.
நாடு தற்போது முன்னோக்கிக் கொண்டு செல்லப்பட வேண்டுமாயின் பொருளாதாரம், அரசியல் மற்றும் சமூக செயற்பாடுகளில் மாற்றங்கள் அவசியமாகும்.
எனவே, எதிர்வரும் காலங்களில் எந்தவொரு வன்முறை மற்றும் மோதல்களில் நாட்டு மக்கள் ஈடுபடக் கூடாது எனவும், தற்போது கிடைக்கப்பெற்றுள்ள வெற்றி, நாட்டில் உள்ள அனைவருக்கும் உரித்தானது எனவும் அவர் குறிப்பிட்டார்.
அரசியல் கட்சிகள் எந்தவொரு நிலைப்பாட்டிலிருந்தாலும், நாட்டு மக்களின் நலன் கருதி அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட முடியும் என்ற நம்பிக்கை உள்ளது.
அனைத்து இன மக்களையும் இலங்கை பிரஜைகளாகக் கருதி எந்தவொரு வேறுபாடும் இன்றி நாட்டை முன் கொண்டு செல்வதற்கான பொறுப்பு தங்களிடம் உள்ளதாக ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டுள்ள அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.