இலங்கையின் 9 ஆவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக அனுரகுமார திசாநாயக்க இன்று பதவியேற்பு
2024 ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெற்ற தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க இலங்கையின் 9ஆவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக இன்று காலை 9 மணிக்கு ஜனாதிபதி செயலகத்தில் பதவிப் பிரமாணம் செய்ய உள்ளார்.
அனுரகுமார திஸாநாயக்க 1968ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 24ஆம் திகதி கலேவல தேவஹுவ பிரதேசத்தில் பிறந்தார்.
சோஷலிச மாணவர் சங்கத்தின் செயற்பாடுகளில் தனது பாடசாலை காலத்திலிருந்தே இணைந்து கொண்ட அவர் 1987ஆம் ஆண்டு இந்திய - இலங்கை உடன்படிக்கைக்கு எதிரான மாணவர்களின் போராட்டங்களில் முக்கிய இடத்தைப் பிடித்தார்.
1992 ஆம் ஆண்டில் அவர் கணிதப் பிரிவில் உயர்தரம் கற்று, பௌதீக பிரிவில் களனிப் பல்கலைக்கழகத்திற்குத் தெரிவானார்.
களனிப் பல்கலைக்கழகத்தை தமது தேசிய அரசியலின் தாயகமாக மாற்றிய அவர் 1995ஆம் ஆண்டு பௌதீகவியலில் பட்டம் பெற்றார்.
1997ஆம் ஆண்டு, ஜே.வி.பி.யுடன் அரசியல் நடவடிக்கைகளைத் தொடர்ந்த அனுரகுமார திஸாநாயக்க, சோசலிச மாணவர் ஒன்றியத்தின் தேசிய அமைப்பாளராகவும், ஜே.வி.பி.யின் மத்தியக் குழு உறுப்பினராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
அனுரகுமார திஸாநாயக்க 1998 ஆம் ஆண்டில் ஜே.வி.பியின் அரசியல் குழு உறுப்பினராகவும் நியமிக்கப்பட்டார்.
2000ஆம் ஆண்டு முதல் முறையாக நாடாளுமன்ற உறுப்பினராகத் தெரிவு செய்யப்பட்ட அனுரகுமார திஸாநாயக்க ஆரம்பம் முதலே முக்கிய அரசியல் பிரமுகராகத் திகழ்ந்துவந்தார்.
2004 ஆம் ஆண்டு பொதுஜன ஐக்கிய முன்னணியுடன் இணைந்து ஸ்தாபிக்கப்பட்ட ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் கீழ் மீண்டும் பொதுத் தேர்தலில் போட்டியிட்ட அனுரகுமார திஸாநாயக்க, குருணாகல் மாவட்டத்திலிருந்து நாடாளுமன்றத்திற்குத் தெரிவு செய்யப்பட்டார்.
அந்த அரசாங்கத்தில் விவசாயம், காணி, நீர்ப்பாசனம் மற்றும் கால்நடைத்துறை அமைச்சராகவும் அவர் நியமிக்கப்பட்டார்.
ஜே.வி.பியின் முன்னேற்றத்திற்காக பாரிய பணியை ஆற்றிய அனுரகுமார திஸாநாயக்க 2014ஆம் ஆண்டு அதன் தலைவராகவும் பதவியேற்றார்.
24 வருடங்களாக நாடாளுமன்றத்தில் செயற்பட்ட அரசியல்வாதிகளில் ஒருவராக இருந்த அனுரகுமார திஸாநாயக்க 2018ஆம் ஆண்டு எதிர்க்கட்சியின் பிரதம அமைப்பாளராகவும் தெரிவு செய்யப்பட்டார்.
ஜே.வி.பியின் தலைமையில் தேசிய மக்கள் சக்தியை உருவாக்கி 2019ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் முதல் தடவையாகப் போட்டியிட்ட அனுரகுமார திஸாநாயக்கவால் குறித்த தேர்தலில் 3 சதவீத வாக்குகளையே பெற முடிந்தது.
எவ்வாறாயினும், நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடிகளுக்கு முகங்கொடுத்து தேசிய மக்கள் சக்தியின் கருத்தை ஸ்திரப்படுத்த அயராது உழைத்த அநுரகுமார திஸாநாயக்க மாற்று அரசியல் சித்தாந்தத்தைப் பிரபலப்படுத்தி இந்த ஆண்டு மீண்டும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்டார். அதற்காக மக்கள் வழங்கிய வாக்கின் படி அவர் தற்போது வெற்றி பெற்றுள்ளார்.