இந்திய இழுவை மடி படகுகளின் அத்துமீறல் செயற்பாட்டை தடுத்து நிறுத்துங்கள் - யாழில் உள்ள இந்திய துணைத் தூதரகத்தை முற்றுகையிடப்போவதாக யாழ்ப்பாண கடற்றொழிலாளர் பிரதிநிதிகள் அறிவிப்பு
இந்திய இழுவை மடி படகுகளின் அத்துமீறல் செயற்பாட்டை தடுத்து நிறுத்த கோரி நாளையதினம் யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துணைத் தூதரகத்தை முற்றுகையிடப்போவதாக அறிவித்துள்ள யாழ்ப்பாண கடற்றொழிலாளர் பிரதிநிதிகள், எமக்கு விரைவில் தீர்வு கிடைக்காவிடில் நாடாளுமன்றத்தையும் முற்றுகையிடுவோம் என்றனர்.
யாழ்ப்பாணத்தில் கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்க சமாசங்களின் சம்மேளனத்தின் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இது தொடர்பிலான அறிவிப்பு வெளியிடப்பட்டது.
கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்க சமாசங்களின் சம்மேளனத்தின் தலைவர் சிறீகந்தவேல் புனித பிரகாஸ் கருத்து தெரிவிக்கையில்,
இந்திய இழுவை மடி படகுகளின் அத்துமீறல் செயற்பாடு எமது கடற்பகுதிகளில் அரங்கேறிவருகிறது. இதனால் எமது கடற்றொழிலாளர்கள் பெருமளவு பாதிபாபை எதிர்கொள்கின்றனர்.
இதனடிப்படையில் நாளை காலை 10 மணிக்கு இந்திய துணைத் தூதரகத்திற்கு முன்பாக போராட்டத்தை ஏற்பாடு செய்துள்ளோம்.
ஜனாதிபதி, கடற்றொழில் அமைச்சர், துறைசார்ந்த திணைக்களங்கள் விரைந்து செயற்பட்டு இந்திய இழுவை மடி படகுகளை கட்டுப்படுத்த வேண்டும். இல்லையேல் நாடாளுமன்றத்தை முற்றுகையிட எமது அமைப்புக்கள் திட்டமிட்டுள்ளன.
இதனிடையே யாழ் மாவட்ட கடற்றொழில் கிராமிய அமைப்புகளின் சம்மேளன தலைவர் செல்லத்துரை நற்குணம் கருத்து தெரிவிக்கையில், இந்திய இழுவைமடி கடற்றொழிலாளர்களின் அத்துமீறல் எமது மக்கள் வீதிக்கு வந்து பட்டினிச்சாவை எதிர்நோக்க வேண்டி வரும். சிறுவர் தொடங்கி பெரியவர் இதன்மூலம் பாதிப்புக்களை எதிர்கொள்வர்.
இலங்கை அரசாங்கம் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.மனித நேயத்துடன் இந்திய மற்றும் தமிழக அரசாங்கம் செயற்படவேண்டும். இந்தியாவின் மிலேச்சத்தனமாகவே இதனை பார்க்கிறோம்.
இந்திய துணைத் தூதரகத்தின் முன்பாக நாளை தினம் நடைபெறவுள்ள போராட்டத்திற்கு அனைத்து கடற்றொழிலாளர்களையும் பங்கேற்குமாறு வேண்டுகிறோம் என்றும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது
000