மடு தேவாலயத்திற்கு வருவோர் இடையூறின்றி வழிபாடுகளில் ஈடுபட வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்கப்படும் - ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உறுதி
மன்னார் - மடு தேவாலயத்திற்கு வருவோர் இடையூறின்றி வழிபாடுகளில் ஈடுபட வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உறுதியளித்துள்ளார்.
மன்னார், மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்துரைத்த போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
மடு மற்றும் சிவனொளிபாத மலை போன்ற புனித தலங்களுக்கான நுழைவு வீதிகள் அவற்றை வழிபட வருவோருக்காகவே அமைக்கப்பட்டுள்ளன.
மடு தேவாலயத்தில் வழிபாட்டுக்காக வருவோர் ஏதேனும் உரிய காரணிகளின்றி கைது செய்யப்படும் பட்சத்தில் உடனடியாக அது குறித்து ஜனாதிபதி அலுவலகத்திற்கு அறிவிக்கும்படியும் ஜனாதிபதி இதன்போது அறிவித்துள்ளார்.
மடு தேவாலயத்தை வழிபட வருவோருக்காக தேவாலய நுழைவு வீதியின் இரு புறங்களையும் தூய்மைப்படுத்தி அபிவிருத்தி பணிகளை செய்யுமாறு இராணுவத்தினருக்கு இதன்போது ஜனாதிபதி அறிவுறுத்தல் விடுத்துள்ளார்.
அத்துடன், அந்த பணிகளுக்காக மன்னார் மறை மாவட்ட ஆயரின் பிரதிநிதி ஒருவர், வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்களத்தினர், வீதி அபிவிருத்தி அதிகார சபையினர் மற்றும் காவல்துறையினரை தொடர்புபடுத்திக்கொண்டு செயற்படுமாறும் அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் நாட்களில் நடக்கவிருக்கும் மடு தேவாலயத்தின் உற்சவத்திற்கு முன்னதாக தூய்மைப்படுத்தல் பணிகளை நிறைவு செய்யுமாறும் ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது
000