சன் எக்ஸ்பிரஸ் விமானத்தில் வழங்கப்பட்ட உணவில் பாம்பின் தலை
ஜூலை 21 அன்று துருக்கியில் உள்ள அங்காராவிலிருந்து ஜெர்மனியில் உள்ள டுசெல்டார்ஃப் நகருக்குச் சென்ற சன் எக்ஸ்பிரஸ் விமானத்தில் அதிர்ச்சியூட்டும் சம்பவம் நடந்துள்ளது. ஒரு சிறிய பாம்பின் தலை உருளைக்கிழங்கு மற்றும் காய்கறிகளுக்கு இடையில் மறைந்திருந்துள்ளது.
துருக்கியைச் சேர்ந்த விமான நிறுவனத்தைச் சேர்ந்த விமானப் பணிப்பெண் ஒருவர், விமானத்தில் சாப்பிட்ட உணவில் பாம்பின் தலை துண்டிக்கப்பட்டதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். இது தொடர்பாக டிவிட்டரில் பகிரப்பட்ட வீடியோவில், பாம்பின் துண்டிக்கப்பட்ட தலை உணவு தட்டில் நடுவில் கிடப்பதைக் காட்டுகிறது.
இது குறித்து உடனடியாக சன் எக்ஸ்பிரஸ் விமான நிறுவத்தின் பிரதிநிதி கூறியதாவது, இந்த சம்பவம் முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது. உணவு வழங்கிய நிறுவனத்தின் ஒப்பந்தத்தை விமான நிறுவனம் இடை நிறுத்தியுள்ளது மற்றும் விசாரணையும் தொடங்கப்பட்டுள்ளது. விமானத் துறையில் 30 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவத்துடன் இருக்கும் எங்கள் விமானத்தில் எங்கள் விருந்தினர்களுக்கு நாங்கள் வழங்கும் சேவைகள் மிக உயர்ந்த தரம் வாய்ந்தவை மற்றும் எங்கள் விருந்தினர்கள் மற்றும் பணியாளர்கள் இருவரும் வசதியான மற்றும் பாதுகாப்பான விமான அனுபவத்தைப் பெறுவதே எங்கள் முன்னுரிமை எனவும் குறிப்பிட்டார்.