தினமும் 5 கோக், 6 வயது சிறுவன் போல நொறுக்குத் தீனி - 92 வயது வாரன் பஃபெட்
ஆறு வயது சிறுவனின் உணவு முறையைப் பின்பற்றுவதாகச் சொல்லும் உலகப் பணக்காரர்களில் ஒருவரான வாரன் பஃபெட் தனது உணவுப் பழக்கம் குறித்து பகிர்ந்த 10 தகவல்கள்.
முதலீட்டாளரும் பெர்க்ஷயர் ஹாத்வே தலைமை நிர்வாக அதிகாரியுமான வாரன் பஃபெட், மெக்-டொனால்ட்ஸ் உணவகத்தின் பெரிய ரசிகர், வாடிக்கையாளர். தினமும் 5 கோக் கேன்களை காலி செய்பவர். நொறுக்குத் தீனிகளையும் ஐஸ்கிரீமையும் விட்டு வைக்கமாட்டார். பெர்க்ஷயர் முதலீட்டு நிறுவனம் சீஸ் கேண்டீஸ் மற்றும் டைரி குயீன் ஆகியவற்றின் உரிமையாள நிறுவனமாகும். இதன் ஸ்டாக் போர்ட்ஃபோலியோவில் கோககோலா மற்றும் கிராஃப்ட் ஹெய்ன்ஸ் போன்ற மிகப் பெரிய நிறுவனங்களும் உள்ளன. அதாவது, பெரிய முதலீட்டாளர் என்பதற்கு அடையாளமாக வாரன் பஃபெட்டின் மூலாதார முதலீட்டு மையமாக இந்த நிறுவனங்கள் இடம்பெறுவது வழக்கம்.
காய் - கனிகள், மற்ற ஆரோக்கியமான உணவு வகைகளை அவரிடம் கூறினால் வெறுப்புடன் ஒதுக்கி விடுவார். உணவே மருந்து என்பதையெல்லாம் அவர் கேலி பேசக்கூடியவர். அவரால் எப்படி இந்த மாதிரி, இப்போது நாம் ‘ஜங்க்’ என்று சொல்லக் கூடிய உணவு வகைகளை, நொறுக்குத் தீனிகளை விடாமல் சாப்பிட முடிகிறது? இதற்கான விடையை அவரே வெவ்வேறு தருணங்களில் சிஎன்பிசி, ஃபார்ச்சூன், தி ஸ்னோபால் முதலான புத்தகங்கள், வெவ்வேறு மேடைகளில் அளித்திருக்கிறார்.
1. “ஆறு வயது சிறுவனின் உணவுப் பழக்கவழக்கங்களை வைத்துக் கொண்டுதான் நான் 92 வயதை அடைந்துள்ளேன். இதுவரை, அது வேலை செய்கிறது. சார்லிக்கு 99 வயதாகிறது, அவர் என்னை விட நன்றாக சாப்பிடுவதில்லை. எனக்கு ஆறு வயதாகும்போதே நான் சாப்பிட விரும்பும் அனைத்தையும் கண்டுபிடித்துக் கொண்டேன். மற்ற உணவு வகைகளைப் பார்த்து நான் ஏன் ஏமாந்து முட்டாளாக வேண்டும்?
2. “ஒரு மனிதனுக்கு சந்தோஷம்தான் அதிக ஆயுளைக் கொடுக்கின்றது. நான் கோக் குடிக்கும்போது அல்லது ஹாட் ஃபட்ஜ் அல்லது ஹாட் டாக்ஸ் சாப்பிடும்போது மகிழ்ச்சியாக இருக்கிறேன். மகிழ்ச்சியாக இருப்பதால் ஆயுள் கூடுகின்றது.”
3. “நான் ஒருநாளைக்கு 2,700 கலோரிகளை சாப்பிடுகிறேன் என்றால், அதில் கால் பங்கு கோககோலா ஆகும். நான் குறைந்தது 12 அவுன்ஸ் கொண்ட 5 கோக்குகளைக் குடிப்பேன். நான் அதை ஒவ்வொரு நாளும் செய்கிறேன். நான் பகலில் மூன்று கோக்குகளையும், இரவில் இரண்டு கோக்குகளையும் வைத்திருக்கிறேன்.”
4. “நான் டயட் செயல்பாட்டு அட்டவணைகளைப் பார்த்தேன். 6 வயது மற்றும் அதற்கு உட்பட்ட வயதினரிடமே இறப்பு விகிதம் குறைவாக உள்ளது. அதனால் 6 வயது குழந்தை போல சாப்பிட முடிவு செய்தேன். இது நான் எடுக்கக்கூடிய பாதுகாப்பான வழி.”
5. “உணவு விஷயத்தில் நான் மிகவும் எளிமையான விதியைப் பின்பற்றுகிறேன். மூன்று வயது குழந்தை சாப்பிடாத ஒன்றை நானும் சாப்பிட மாட்டேன்.”
6. “ப்ரோக்கோலி, அஸ்பாரகஸ் மற்றும் பிரஸ்ஸல்ஸ் முளைகள் ஒரு தட்டில் ஊர்ந்து செல்லும் சீன உணவைப் போல எனக்குத் தெரிகிறது. காலிஃபிளவர் கிட்டத்தட்ட என்னை நோய்வாய்ப்படுத்துகிறது. கேரட்டை நான் தயக்கத்துடன் சாப்பிடுகிறேன். எனக்கு சர்க்கரை வள்ளிக்கிழங்கு பிடிக்காது. நான் ருபார்ப் அருகில் கூட இருக்க விரும்பவில்லை, அது என்னை எரிச்சலடையச் செய்கிறது.
7. “மீட்டிங்கின்போது, சார்லியும் நானும் ஒரு என்.எஃப்.எல் லைன்மேனின் வாராந்திர கலோரி தேவைகளைப் பூர்த்தி செய்ய போதுமான கோக், சீயின் ஃபட்ஜ் மற்றும் சீயின் உடைந்த வேர்க்கடலையை உட்கொள்வோம். நீண்ட காலத்திற்கு முன்பு நாங்கள் ஒரு அடிப்படை உண்மையைக் கண்டுபிடித்தோம்:
8. “நாம் செய்யும் காரியத்திலிருந்து எப்படி மகிழ்ச்சியைப் பெறுவது அல்லது மகிழ்ச்சியாகச் செய்வது என்பது பற்றி ஏகப்பட்ட விஷயங்கள் பேசப்பட்டு விட்டன. நான் என் வாழ்நாள் முழுவதும் ப்ரோக்கோலி மற்றும் பிரஸ்ஸல்ஸ் முளைகளை சாப்பிட்டிருந்தால், நான் நீண்ட காலம் வாழ்ந்திருப்பேன் என்று நினைக்கவில்லை.
9. “கோக கோலா குடிப்பதை ஹோல் ஃபுட்ஸில் யாராவது எனக்கு விற்கும் விஷயத்துடன் ஒப்பிடும்போது - ஹோல் ஃபுட்ஸில் உள்ளவர்களின் முகத்தில் புன்னகையை நான் ஒருபோதும் காணவில்லை. ஒரே பொருளை மீண்டும் மீண்டும் சாப்பிடுவது எனக்கு மிகவும் பிடிக்கும். தொடர்ந்து 50 நாட்கள் தினமும் காலை உணவாக ஒரு ஹாம் சாண்ட்விச்சை என்னால் சாப்பிட முடியும்.”
10. “நான் எந்த சீன உணவுகளையும் உண்பதில்லை. தேவைப்பட்டால் சாதம் எடுத்துக் கொள்வேன். அதையும் என் தட்டில் சுற்றிவர நகர்த்திக் கொண்டே இருப்பேன். பிறகு அறைக்குச் சென்று வேர்க்கடலை சாப்பிடுவேன்.”