தமிழேந்தல் ஈழவேந்தன் கனடாவில் காலமானார்
தமிழேந்தல் என்று தமிழரசுத் தலைவர்களாலும் தொண்டர்களாலும் அன்பாக அழைக்கப்பட்ட ஈழவேந்தன் ஐயா அவர்கள் கனடாவில் 28.04.2024 அன்று காலமானார்.
ஏறக்குறைய 60 ஆண்டுகளுக்கு முன்னர் ஈழம் என்ற சொல்லைப் பயன்படுத்த யாருக்குமே துணிவு வராத காலத்தில் கொழும்பு மாநகரில் ஈழவேந்தன் என்ற புனைப்பெயரில் தமிழ்த்தேசிய உடை அணிந்து தலைநகரில் தொழில் புரிந்து கொண்டு இடையிடையே இந்து மதப் பணியும் இடையறாத தமிழ்ப்பணியும் தடையுறாத இன விடுதலைப் பணியும் புரிந்து கொண்டிருந்த ஒரு துணிச்சல் மிக்க மனிதர் ஈழவேந்தன்.
காலத்தின் கோலத்தால் தாயகத்தை விட்டு தமிழகம் சென்ற ஈழவேந்தன் அவர்கள் அங்கும் மற்றத் தலைவர்கள் போல் சொகுசு வாழ்க்கை வாழவில்லை. தன்னால் முடிந்தளவுக்கு இரவு பகல் பாராது தமிழீழ விடுதலைக்குப் பணியாற்றினார். அவரது செயற்பாடுகளால் கலக்கமுற்ற இந்திய மத்திய அரசு அவரை நாடு கடத்தியது.
வன்னிப் பெரு நிலப்பரப்பு அன்று வாழ்த்தி வரவேற்றது. அவரது விடுதலை வேட்கைக்கு மதிப்பளித்து இலங்கை நாடாளுமன்றத்திற்கு அனுப்பி வைத்தது. அங்கும் விடுதலைக் குரலை ஓங்கி ஒலித்தார்.
கனடாவுக்கு புலம்பெயர்ந்த அவர் இங்கும் கடும் குளிரோ கடும் வெய்யிலோ எதனையும் பொருட்படுத்தாமல் இறுதி மூச்சை நிறுத்தும் நிமிடம் வரை தமிழ்ப்பணியையும் இன விடுதலைக்கான குரலையும் ஓங்கி ஒலித்தார்.
தள்ளாத வயதிலும் தமிழ்ப்பணி ஆற்றிய பெரியவர் ஈழவேந்தன் அவர்களுக்கு கடந்த 23 ஏப்ரல் 2023 நடைபெற்ற ஈழநாடு பத்திரிகை 31வது ஆண்டு விழாவில் வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கிக் கௌரவித்தது.
60 ஆண்டுகளுக்கு மேலாக தமிழ் பணியோடு இனவிடுதலைக்கு ஓங்கிக் குரல் கொடுத்த குரல் இன்று அடங்கி விட்டது.