சொந்த உழைப்பில் விமானம் தயாரித்து குடும்பத்துடன் உலக நாடுகளை சுற்றும் கேரளவாசி
கேரளாவை சேர்ந்த என்ஜினீயர் அசோக் அலிசெரில் தமரக்சன் (வயது 38). இவரது மனைவி அபிலாஷா. இந்த தம்பதிக்கு 2 மகள்கள் உள்ளனர். அசோக், முன்னாள் எம்.எல்.ஏ.வான ஏ.வி. தமரக்சனின் மகன். கடந்த 2006ம் ஆண்டு இங்கிலாந்து நாட்டுக்கு தனது மனைவியுடன் சென்ற அசோக் லண்டனில் வசித்து வருகிறார்.
கொரோனா பெருந்தொற்று பரவிய காலத்தில் புதிய விமானம் ஒன்றை உருவாக்க அசோக் திட்டமிட்டு உள்ளார்.
ஜோகன்னஸ்பர்க்கை அடிப்படையாக கொண்ட ஸ்லிங் என்ற விமான நிறுவனம், 2018ம் ஆண்டில் ஸ்லிங் டி.எஸ்.ஐ. என்ற பெயரிடப்பட்ட விமானம் ஒன்றை அறிமுகப்படுத்தியது. இதனால், அதன் தொழிற்சாலைக்கு சென்று பார்வையிட்டார்.
இந்திய பண மதிப்பின்படி ரூ.1.8 கோடி செலவிடப்பட்டு விமானத்தை தயாரித்து உள்ளார். புதிய விமானம் உருவானதும் அதற்கு தனது இளைய மகளான தியாவின் பெயரை கொண்டு, ஜி-தியா என அவர் பெயர் சூட்டியுள்ளார். முதன்முறையாக நடப்பு ஆண்டு பிப்ரவரியில் தமரக்சன், சொந்த உழைப்பின் உருவான புதிய விமானத்தில் பயணம் மேற்கொண்டார்.
அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் நாமே உருவாக்கிய விமானத்தில் பயணிப்பதில் எந்த பிரச்சனையுமில்லை என அவர் கூறுகிறார். ஒற்றை என்ஜின் கொண்ட ஸ்லிங் சி ரக விமானத்தில் தனது மனைவி மற்றும் இரு மகள்களுடன் ஜெர்மனி, ஆஸ்திரியா மற்றும் செக் குடியரசு ஆகிய நாடுகளுக்கு அவர் பயணம் மேற்கொண்டுள்ளார். தற்போது, விடுமுறையை கொண்டாட தமரக்சன் கேரளாவிற்கு வருகை தந்துள்ளார்.