
இப்ராஹிம் ரைசியின் இறுதிக்கிரியைகள் இன்று - ஈரானிய ஜனாதிபதியின் திடீர் மறைவுக்கு இலங்கையில் துக்க தினம் அனுஷ்டிப்பு
ஈரானிய ஜனாதிபதியின் திடீர் மறைவையொட்டி இலங்கையில் இன்று (21) தேசிய துக்க தினம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
அரச நிர்வாக, உள்நாட்டலுவல்கள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்கள் அமைச்சின் செயலாளர் பிரதீப் யசரத்ன வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதற்கமைய, அனைத்து அரச நிறுவனங்களிலும் இன்றைய தினம் தேசியக் கொடியை அரைக்கம்பத்தில் பறக்கவிடுமாறும் குறிப்பிடப்பட்டுள்ளது.
முன்பதாக ஈரானிய ஜனாதிபதி இப்ராஹிம் ரைசியின் மறைவிற்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தமது இரங்கலை எக்ஸ் தளத்தில் இந்த இரங்கலை வெளியிட்டுள்ளார்.
ஈரானிய ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி, அந்த நாட்டின் வெளிவிவகார அமைச்சர் அமீர் அப்துல்லாஹியன் மற்றும் பல சிரேஷ்ட அதிகாரிகளின் திடீர் மறைவினால் இலங்கை அதிர்ச்சியும், கவலையும் அடைந்துள்ளது.
அவர்களது மறைவுக்கு இலங்கையர்கள் சார்பில் ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவிப்பதாகவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
இதேவேளை, ஈரானிய ஜனாதிபதி இப்ராஹிம் ரைசியின் மறைவு ஈரானுக்கு மட்டுமல்லாது சர்வதேசத்துக்குமான பாரிய இழப்பாகும் என எதிர்க்கட்சித்தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
அதேநேரம், வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட பலரும் ஈரானிய ஜனாதிபதி உள்ளிட்டோரின் மறைவிற்கு இரங்கலை தெரிவித்துள்ளனர்.
கடந்த ஏப்ரல் மாதம் 24 ஆம் திகதி ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டு ஈரானின் நிதியுதவியில் நிர்மாணிக்கப்பட்ட உமா ஓயா பல்நோக்கு அபிவிருத்தித் திட்டத்தை மக்கள் பாவனைக்காக கையளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
இதனிடையே உலங்குவானூர்தி விபத்தில் உயிரிழந்த ஈரான் ஜனாதிபதி, இப்ராஹிம் ரைசியின் சடலம் அவரது சொந்த இடமான மஷாட்டில் இன்று செவ்வாய்க்கிழமை (21) நல்லடக்கம் செய்யப்படவுள்ளது.
நேற்றுமுன்தினம் (19) இடம்பெற்ற உலங்குவானூர்தி விபத்தில் 63 வயதான ஈரான் ஜனாதிபதி, வெளிவிவகார அமைச்சர் உள்ளிட்ட 09 பேர் உயிரிழந்தனர்.
இந்நிலையில் ஈரானில் ஐந்து நாட்கள் தேசிய துக்க தினம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. இதேவேளை, இலங்கையிலும் இன்று (21) துக்கதினம் அனுஷ்டிக்கப்படுகின்றது
இதற்காக அனைத்து அரச நிறுவனங்களிலும் தேசியக் கொடியை அரை கம்பத்தில் பறக்கவிடுமாறு பணிப்புரை வழங்கப்பட்டுள்ளதாக பொது நிர்வாக அமைச்சின் செயலாளர் பிரதீப் யசரத்ன தெரிவித்துள்ளார்.
இதேவேளை இந்தியாவிலும் இன்று துக்கதினம் அனுஷ்டிக்கப்படவுள்ளதாக இந்திய உள்துறை அமைச்சு அறிவித்துள்ளது.
மறைந்த பிரமுகர்களுக்கு மரியாதை செலுத்தும் வகையில், இந்தியா முழுவதும் இன்று துக்கம்தினம் அனுஷ்டிக்க அந்நாட்டு அரசு தீர்மானித்துள்ளது.
லெபனானிலும் 03 நாட்கள் துக்கதினம் அனுஷ்டிக்கப்படவுள்ளதாக அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.
இதேவேளை ஈரான் ஜனாதிபதி உள்ளிட்டோரின் மறைவிற்கு அமெரிக்கா தனது "உத்தியோகப்பூர்வ இரங்கலை" தெரிவித்துள்ளது.
"ஈரான் புதிய ஜனாதிபதி ஒருவரை தேர்வு செய்கையில் ஈரானிய மக்களுக்கான ஆதரவையும், மனித உரிமைகள் மற்றும் அடிப்படை சுதந்திரங்களுக்கான அவர்களின் போராட்டத்தையும் நாங்கள் மீண்டும் உறுதிப்படுத்துகிறோம்" என அமெரிக்க வெளியுறவுத்துறை அறிக்கையொன்றை வெளியிட்டு குறிப்பிட்டுள்ளது.
ஈரானியத் தலைமை அமெரிக்காவை அதன் எதிரியாகப் பார்க்கிறது, மேலும் இரு தரப்பினரும் கடந்த காலங்களில் மீண்டும் மீண்டும் போரின் விளிம்பில் இருந்தமை குறிப்பிடத்தக்கது
000