
32 மில்லியன் நிதி ஒதுக்கீடு - புதிதாக நிர்மாணிக்கப்பட்ட கற்கோவளம் தீர்த்தக்கரை பாலத்தினை நேரில் சென்று பார்வையிட்ட டக்ளஸ்
கற்கோவளம் பிரதேசத்தில் கடற்றொழிலாளர்களின் தொழில்சார் செயற்பாடுகளுக்கான பிரதான போக்குவரத்து மார்க்கமாகவும், வல்லிபுரம் ஆழ்வார் ஆலயத்தின் தீர்த்த திருவிழா அடியவர்களினால் பயன்படுத்தப்படுவதுமான கற்கோவளம் தீர்த்தக்கரை பாலத்தினை ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா இன்று பார்வையிட்டார்.
குறித்த பாலம் நல்லாட்சி என்று அழைக்கப்பட்ட காலப் பகுதியில் கம்பெரலிய திட்டத்தின் ஊடாக புனரமைக்கப்பட்டிருந்தது. எனினும் புனரமைப்பு பணிகள் நிறைவடைந்து சில மாதங்களிலேயே குறித்த பாலம் இடிந்து விழுந்திருந்தது.
இந்நிலையில், கடற்றொழில் அமைச்சராக இருந்த காலப்பகுதியில் இடிந்த பாலத்தினை பார்வையிட்ட டக்ளஸ் தேவானந்தா, கடற்றொழில் அமைச்சின் ஊடாக அந்த பாலத்தினை புனரமைப்பதற்கான சுமார் 32 மில்லியன் ரூபாய் நிதியினை ஒதுக்கீடு செய்திருந்தார்.
இந்நிலையில், தற்போது பாலத்தின் கட்டுமான வேலைகள் நிறைவடைந்த நிலையில் அதனை பார்வையிட்ட செயலாளர் நாயகம், பிரதேச மக்களின் அபிப்பிராயங்களையும் கேட்டறிந்தார்.
குறித்த பலத்தினை புனரமைப்பதுடன், குறித்த கடல் நீரேரியை ஆழப்படுத்தி நீர் வேளாண்மையை விருத்தி செய்வதற்கும் பாலத்தினை அண்டிய சுற்றாடலை சுற்றுலா பகுதியாகவும் மாற்றுவதற்கு திட்டமிட்டிருந்த போதிலும், துரதிஸ்டவசமாக ஆட்சி மாற்றம் ஏறபட்டுவிட்டதாக தெரிவித்துள்ள செயலாளர் நாயகம், எதிர்காலத்தில் வாய்ப்பு கிடைக்கும் பட்சத்தில் அவை நடைமுறைப்படுத்ளப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.
மேலும், அப்பகுதியில் காணப்படு்ம் மொத்த மீன் விற்பனை சந்தையையும் பார்வையிட்ட செயலாளர் நாயகம் அதன் குறைபாடுகள் தொடர்பாகவும் கேட்டறிந்தமை குறிப்பிடத்தக்கது.
000ஸ