
டொராண்டோவில் ஆபத்தான நாய்கள் தொடர்பான சட்டம் பலப்படுத்தப்படும்
டொராண்டோ நகரத்தில் ஆபத்தான நாய்கள் தொடர்பான சட்டங்களை மேலும் கடுமையாக்கும் ஒரு புதிய திட்டம் பொருளாதார மற்றும் சமூக வளர்ச்சி குழுவின் கூட்டத்தில் பரிசீலிக்கப்பட உள்ளது.
கடந்த நவம்பர் மாதம் டோரண்டோ-டான்ஃபோர்த் வார்டின் கவுன்சிலர் பௌலா ஃப்ளெச்சர் இந்த மாற்றங்கள் குறித்த முன்மொழிவை சமர்ப்பித்திருந்தார். ஆபத்தான நாய்கள் வசிக்கும் வீடுகளின் கதவுகளில் அவை இருப்பதைப் பற்றிய எச்சரிக்கை பலகை இடுதல், மற்றும் அந்த நாய்கள் பற்றிய விவரங்களை உள்ளடக்கிய ஆன்லைன் பதிவு அமைப்பை உருவாக்குதல் ஆகியவை இந்த உத்தேச சட்டத்தில் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. இந்த மாற்றங்களை சமர்ப்பிப்பதோடு, கண்டோ குடியிருப்புகளில் உள்ள ஆபத்தான நாய்களின் உரிமையாளர்களுக்கும், அந்த கட்டடங்களை நிர்வகிக்கும் நிறுவனங்களுக்கும் இவை குறித்த தகவல்களை நகரம் கடிதமாக அனுப்ப வேண்டும் எனவும் பௌலா ஃப்ளெச்சர் வலியுறுத்த உள்ளார்.
“நகர காவல் அதிகாரிகள் அந்த கட்டிடங்களுக்கு சென்று, எச்சரிக்கை பலகை அமைக்கப்பட்டுள்ளதா என நேரில் சரிபார்ப்பார்கள்,” என்றும் ஃப்ளெச்சர் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.