
இந்திய பிரதமரிடம் சனத் ஜெயசூரியா கோரிக்கை - யாழ்ப்பாணத்தில் சர்வதேச கிறிக்கெற் மைதானம் அமைக்க மீண்டும் முயற்சி
யாழ் மாவட்ட விளையாட்டுத்துறை சார்ந்தவர்களால் கடந்த கால அரசாங்கங்களில் முன்வைக்கப்பட்ட திட்டமுன்வரைபின் நடவடிக்கைகளின் தொடர்ச்சியாக யாழ் மாவட்டத்தில் சர்வதேச கிரிக்கெட் மைதானம் ஒன்றை அமைப்பதற்கான மற்றுமொரு கள விஜயம் விளையாட்டுத்துறை அமைச்சர் மற்றும் இலங்கை கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்றுவிப்பாளரும், இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவருமான சனத் ஜயசூரிய உள்ளிட்ட குழுவினரால் இன்றையதினம் முன்னெடுக்கப்பட்டது.
யாழ் மாவட்டத்தின் மண்டைத்தீவு பகுதியில் சர்வதேச கிரிக்கெட் மைதானம் ஒன்றை அமைப்பதற்கு கடந்த பல வருடங்களாக திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வந்ததுடன் பல்வேறு தரப்பினராலும் கள விஜயங்களும் முன்னெடுக்கப்பட்டிருந்தன.
இந்நிலையில் வேலணை பிரதேச செயலகத்தால் குறித்த கிறிக்கெற் மைதானத்துக்காக ஏற்கனவே ஒதுக்கப்பட்ட நிலப்பரப்பையும் அதன் நிலைமை தொடர்பாகவும் குறித்த குழுவினர் இன்றையதினம் நேரில் சென்று ஆய்வு செய்ததோடு, கட்டுமாணப்பணிக்கான திட்ட முன்மொழிவு பொறிமுறை ஒன்றினை உருவாக்குவது தொடர்பாகவும் இதன்போது கலந்துரையாடப்பட்டது
வடக்கு பிராந்தியத்தில் கிரிக்கெட் விளையாட்டை தொழில்துறைாயக மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு இந்த கிரிக்கெட் மைதானத்தை அமைப்பதற்கான திட்டங்கள் நீண்டகாலமாக முன்னெடுக்கப்பட்டுவந்த போதிலும் அதற்கான நிதியை பெற்றுக்கொள்வது தொடர்பான ஏதுநிலைகளால் காலம் தாழ்த்தப்பட்டுவந்தது.
இந்’நிலையில் இலங்கை கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்றுவிப்பாளரும், இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவருமான சனத் ஜயசூரிய மைதானத்தின் கட்டுமானத்திற்காக நிதி உதவி வழங்குமாறு கடந்த வாரம் வருகை தந்த இந்திய பிரதமரிடம் கோரிக்கை விடுத்திருந்தார்.
அத்துடன் இன்றும் யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துணை தூதரகத்தில் துணைத்தூதர் சாய் முரளியையும் சந்தித்து இவ்விடயம் தொடர்பில் கலந்துரையாடியிருந்தமை குறிப்பிடத்தக்கது