சாலையோரம் நின்ற கார் மீது கவிழ்ந்த லாரி
கொடைக்கானலில் காய்கறி ஏற்றி வந்த லாரி, கார் மீது கவிழ்ந்து விபத்திற்குள்ளானதில், கார் அப்பளம் போல் நொறுங்கிய சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது.
தமிழ்நாடு மட்டுமன்றி தென்னிந்திய மாநிலங்களில் கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு வரை கடுமையான வெயில் சுட்டெரித்தது. இதனால் ஏராளமான சுற்றுலா பயணிகள் மலைப்பிரதேசங்களை நோக்கி பயணிக்க ஆர்வம் காட்டினர். கடந்த ஒரு வார காலமாக பரவலாக மழை பெய்து வந்த போதும், மலைப்பிரதேசங்களுக்கு செல்வதற்காக முடிவெடுத்திருந்த சுற்றுலா பயணிகள் வழக்கம் போல் பயணம் செய்து வருகின்றனர்.
இதன் ஒரு பகுதியாக திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலுக்கு ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர். இ-பாஸ் நடைமுறை இருப்பதால் மலை அடிவாரத்தில் இவர்கள் பதிவு செய்து கொண்டு கொடைக்கானல் மலைப்பகுதிகளை சுற்றி பார்க்கின்றனர். கொடைக்கானலில் இன்று 61வது மலர் கண்காட்சி துவங்கி உள்ளதை அடுத்து, வரவிருக்கும் 10 நாட்கள் சுற்றுலா பயணிகளின் வரத்து அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் கர்நாடக மாநிலத்தில் இருந்து சுற்றுலா பயணிகள் 5 பேர் கொடைக்கானலுக்கு வருகை தந்தனர். இவர்கள் பல்வேறு இடங்களையும் சுற்றி பார்த்த பின்னர், பண்ணைக்காடு பிரிவு பகுதியில் சாலை ஓரத்தில் தங்களது காரை நிறுத்திவிட்டு அருகில் இருந்த கடைக்கு சென்று இருந்தனர். அப்போது மேல்மலை கிராமத்திலிருந்து வத்தலகுண்டு நோக்கி காய்கறி ஏற்றி வந்த சரக்கு லாரி ஒன்று வந்து கொண்டிருந்தது. வளைவில் திரும்பும் போது, எதிர்பாராத விதமாக சரக்கு லாரி, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் எதிர் புறமாக கவிழ்ந்தது.
அப்போது அங்கு நின்ற காரின் மீது லாரி விழுந்ததில் கார் அப்பளம் போல் நொறுங்கியது. நல்வாய்ப்பாக காரில் யாரும் இல்லாததால் பெரும் உயிர்ச் சேதம் தவிர்க்கப்பட்டது. லாரி கவிழ்ந்து விழுந்த விபத்து காரணமாக அந்த பகுதியில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த போலீஸார், லாரியை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீர் செய்யும் பணியில் ஈடுபட்டனர்.