ஓட்டு செலுத்தியது யாருக்கு என பகிரங்கமாக வெளியிட்ட காவலர் மீது வழக்கு
சிவகங்கை மாவட்டம் காளையார் கோவிலை அடுத்த வேம்பனி கிராமத்தைச் சேர்ந்தவர் சதீஷ்குமார். இவர் மத்திய ரிசர்வ் போலீஸில் பணிபுரிந்து வருகிறார். காவல்துறையினர், அரசு அலுவலர்கள் உள்ளிட்டவர்களுக்கு தபால் வாக்குகள் செலுத்தும் வசதியை தேர்தல் ஆணையம் செய்து தந்திருக்கிறது.
அதன்படி தனக்குரிய தபால் வாக்கை செலுத்திய சதீஷ்குமார், அவர் யாருக்கு வாக்களித்தார் என்பதை வாக்களித்த வீடியோவுடன் சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார். அதில் சிவகங்கை தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடும் தேவநாதன் யாதவுக்கு அவர் வாக்களித்தது வெளிப்படையாக தெரிய வந்ததால், அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கைகள் எழுந்தன. அவரின் இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது.
இதையடுத்து சிவகங்கை மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் உத்தரவின் பேரில் அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதையும் பாஜக தரப்பிலிருந்து மற்றவர்களுக்கு செய்தியாக பரப்பி வருகின்றனர். 'தலைவர் அண்ணாமலை தலைமையிலான கூட்டணிக்கு வாக்களித்ததை வீடியோவாக வெளியிட்ட காவலர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அதனால் அனைத்து உறவுகளும் உணர்ச்சிவசப்படாமல் வாக்களிக்க வேண்டுகிறோம். மாற்றம் நம்மில் இருந்து தொடங்கட்டும் என்று பாஜகவினர் ஒருவருக்கொருவர் செய்திகளை பகிர்ந்து கொள்கின்றனர்.