தமிழ்நாட்டில் இன்று மாலை 6 மணியுடன் முடிவடைகிறது தேர்தல் பிரச்சாரம்
நாடாளுமன்ற தேர்தலில் முதற்கட்ட வாக்குப்பதிவு ஏப்ரல் 19ம் தேதி தமிழகத்தில் நடைபெற உள்ள நிலையில், இன்று மாலை 6 மணியுடன் அரசியல் கட்சிகளின் அனைத்து வகையான பிரச்சாரமும் முடிவடைகிறது.
திமுக, அதிமுக, பாஜக கட்சிகள் கூட்டணி வைத்து போட்டியிடுகின்றன.. நாம் தமிழர் கட்சி வழக்கம்போல் இந்த முறையும் தனித்து களம் காண்கிறது.. இவர்களை தவிர, ஏராளமான சுயேச்சைகளும் போட்டியிட போகிறார்கள..
அரசியல் கட்சி தலைவர்கள் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.. தமிழக தலைவர்கள் மட்டுமல்லாமல், தேசிய தலைவர்களும் தமிழகத்தில் முகாமிட்டு, ஓட்டு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள்.
இதுவரை இல்லாத அளவுக்கு, பிரதமர் மோடி, இந்த 4 மாதங்களில் 8 முறை தமிழகத்திற்கு வந்து சென்றுள்ளார்.. உள்துறை அமைச்சர் அமித்ஷா, ராஜ்நாத் சிங், நிர்மலா சீதாராமன், ஜேபி நட்டா என தேசிய தலைவர்கள் தமிழகத்தில் பிரச்சாரம் மேற்கொண்டு, பாஜக கூட்டணி வேட்பாளர்களுக்காக வாக்கு சேகரித்து வருகிறார்கள்.
காங்கிரஸ் முன்னாள் தலைவரும் எம்பியுமான ராகுல் காந்தி, அகில இந்திய காங்கிரஸ் தலைவர் கார்கே என கதர்க்கட்சியை சேர்ந்த தலைவர்களும் இந்தியா கூட்டணிக்காக சேகரிக்கிறார்கள்.
தமிழக முதல்வர் ஸ்டாலின் , எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி, பாஜக தலைவர் அண்ணாமலை, நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், தேமுதிக தலைவர் பிரேமலதா விஜயகாந்த், முன்னாள் முதலமைச்சர் ஓபிஎஸ், என தலைவர்கள் அத்தனைபேரும் தமிழகத்தின் மூலைமுடுக்குகளில் பிரச்சாரம் மேற்கொண்டுள்ளனர்.
வாக்குப்பதிவு முடிவடைவதற்கு, 48 மணி நேரத்திற்கு முன்பாகவே, தேர்தல் பிரச்சாரத்தை நிறைவடைய செய்ய வேண்டும் என்பது தேர்தல் விதியாகும். எனவே, இன்று மாலையுடன் பிரச்சாரம் முடிகிறது.
அதனால், அனைத்து தலைவர்களும் இன்று இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர். இன்று மாலை 6:00 மணியுடன் அனைத்து வகையான பிரச்சாரங்களும் நிறைவடைகிறது.. தேர்தல் பிரச்சாரம் ஓய்ந்த பிறகு சமூக வலைத்தளங்களில் வாக்கு சேகரித்தால் 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும் என்று தேர்தல் ஆணையம் எச்சரித்துள்ளது.
இதனிடையே, தேர்தல் பிரச்சாரம் ஓய்வடைந்ததற்கு பிறகு கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகளை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. அதன்படி, இன்று மாலை 6 மணிக்கு மேல் எந்த வகையிலும் பிரச்சாரம் மேற்கொள்ளக்கூடாது. இன்று மாலை 6 மணிக்கு மேல் ஊடகங்கள், சமூக வலைதளங்கள் உள்ளிட்ட எந்த வகையிலும் பிரச்சாரம் செய்யக்கூடாது.
பிரச்சாரம் ஓய்ந்ததும், இன்று மாலை 6 மணிக்கு மேல் வெளியூர் நபர்கள் வெளியேற வேண்டும். மேலும் ஓட்டல்கள், விடுதிகளில் வெளியூர் நபர்கள் இல்லை என்று நிர்வாகம் உறுதி செய்ய வேண்டும்" என்று அறிவுறுத்தியிருப்பது குறிப்பிடத்தக்கது.