திமுக, அதிமுக ஊழல்களால் தமிழகம் வளர்ச்சி பெறவில்லை - அமித் ஷா
மதுரை மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் ராம.சீனிவாசனுக்கு ஆதரவாக மதுரையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இன்று ‘ரோடு ஷோ’ நிகழ்ச்சி மூலம் ஆதரவு திரட்டினார். மதுரை நேதாஜி சாலையில் முருகன் கோயில் அருகில் இருந்து தொடங்கி தெற்கு ஆவணி மூல வீதி, நகைக்கடை பஜார் வழியாக விளக்குத் துண் காவல் நிலையம் வரை சென்று இந்த‘ ரோடு ஷோ’நிறைவுற்றது. திறந்த வேனில் சென்ற உள்துறை அமைச்சர் அமித் ஷா, தாமரை சின்னத்தை காண்பித்தவாறு ஆதரவு திரட்டினார்.
சாலையின் இரு பக்கங்களிலும் பாஜகவினர், பொதுமக்கள், வியாபாரிகள் திரண்டு நின்று அமித்ஷாவை பார்த்து உற்சாகமாக கையசைத்து ஆராவாரம் செய்தனர். அவரது வாகனத்துக்கு முன்னதாக மேளதாளம் முழங்க பாஜகவினர் உற்சாகத்துடன் அணிவகுத்துச் சென்றனர். மீண்டும் மோடி பிரதமராக தாமரைக்கு வாக்களியுங்கள் போன்ற கோஷங்களை எழுப்பினர். ரோடு ஷோ விளக்குத்தூண் ரவுண்டானா அருகே நிறைவு பெற்றது. மாலை 6.45 மணிக்கு தொடங்கிய ரோடு ஷோ இரவு 7.30 மணிக்கு விளக்குத்தூண் அருகே நிறைவடைந்தது.
உள் துறை அமைச்சர் அமித் ஷா பேசியது: “மதுரை மக்களுக்கு எனது வணக்கம். மழையிலும் கூட மதுரை மக்கள் மிகப்பெரிய வரவேற்பை அளித்துள்ளீர்கள். தமிழகத்தில் இந்தமுறை அதிமுக, திமுக இரு கூட்டணியையும் 40 தொகுதிகளிலும் கைவிட வேண்டும். அதிமுக, திமுக இவர்களிடையே நிலவும் ஊழலால் தமிழகம் பெற வேண்டிய வளர்ச்சிகளை பெறவில்லை. மோடி தேசத்தின் வளர்ச்சி, பாதுகாப்பில் அக்கறை கொண்டுள்ளார். தற்போது சரியான சமயம் வந்துவிட்டது. மோடிக்கு வாக்களிக்க தயாராகி விட்டீர்கள்.
பாஜக மட்டுமே தமிழ் மற்றும் தமிழக வளர்ச்சியில் அக்கறை செலுத்துகிறது. தமிழத்தின் பெருமையை இந்தியாவில் மட்டுமல்ல, உலகம் முழுவதும் பறைசாற்றி வருபவர் பிரதமர் மோடி மட்டுமே. என்னால் தமிழில் பேச முடியவில்லையே என்பதற்காக மன்னிட்டு கேட்டுக்கொள்கிறேன். அடுத்த தேர்தலில் தமிழில் பேச கற்றுக் கொள்வேன். தாமரை சின்னத்துக்கு வாக்களித்து மதுரை வேட்பாளர் பேராசிரியர் ராம.ஸ்ரீனிவாசனை வெற்றி பெறச் செய்ய வேண்டும்” என்று அவர் பேசினார். மேலும், ராம.ஸ்ரீனிவாசன் நன்றி தெரிவித்தபோது, அனைவருக்கும் சித்திரை திருவிழா வாழ்த்துக்களை தமிழில் தெரிவிக்கும்படி அமித் ஷா கூறினார்.