மூளை அறுவை சிகிச்சைக்கு பின் ஜக்கி வாசுதேவ்
உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சத்குரு ஜக்கி வாசுதேவுக்கு மூளையில் ஆபரேஷன் செய்யப்பட்டிருக்கிறது. இந்நிலையில் அவரது உடல் நிலை குறித்த அப்டேட்டை அவரது மகள் தெரிவித்துள்ளார். கோவை ஈஷா மையத்தின் நிறுவனரும், ஈஷா அறக்கட்டளையின் தலைவருமான ஜக்கி வாசுதேவ், கடந்த சில வாரங்களாக கடுமையான தலைவலியால் அவதியுற்று வந்திருக்கிறார். இதனையடுத்து எடுக்கப்பட்ட எம்ஆர்ஐ ஸ்கேனில், அவருக்கு மூளையில் ரத்தக்கசிவு ஏற்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து உடனடியாக அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று மருத்துவர்கள் வலியுறுத்தினர். ஆனால், சிவராத்திரி உள்ளிட்ட விழாக்கள் இருப்பதால் உடனடியாக அறுவை சிகிச்சை செய்துக்கொள்ள ஜக்கி மறுத்திருக்கிறார். எனவே, மருந்துகளின் உதவியுடன் விழாக்களில் அவர் பங்கேற்றிருந்தார். இருப்பினும், தலைவலி ஒரு கட்டத்தில் தீவிரமடைந்தது. அதேபோல சுயநினைவும் கொஞ்சம் கொஞ்சமாக ம் இழக்க தொடங்கியது. வலது கால் உணர்வற்று போனது. இதனையடுத்து, உடனடியாக கடந்த 17ம் தேதி அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். டெல்லியின் அப்போலோ மருத்துவமனையில் அவருக்கு அவசர சிகிச்சை பிரிவில் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிந்த நிலையில், அவருக்கு பொருத்தப்பட்டிருந்த செயற்கை சுவாச கருவிகள் அகற்றப்பட்டன. அதேபோல உடல் நலமும் கொஞ்சம் கொஞ்சமாக தேறி வரத் தொடங்கியது. பிரதமர் நரேந்திர மோடி, "ஜக்கி வாசுதேவ் விரைவில் குணமடைய வேண்டும்" என்று வாழ்த்தியிருந்தார். சிகிச்சை குறித்து அப்பல்லோ மருத்துவமனையைச் சேர்ந்த நரம்பியல் நிபுணர் டாக்டர் வினித் சூரி கூறுகையில், "நாங்கள் எங்கள் பங்கை செய்துவிட்டோம். எங்களின் எதிர்பார்ப்பை விட அவருடைய உடல் வேகமாக குணமடைந்து வருகிறது. இப்போது அவருடைய உடல் நிலை சீராக இருக்கிறது. மூளை வேகமாக சரியாகி வருகிறது" என்று கூறியிருந்தார். இதனையடுத்து, ஜக்கி வாசுதேவ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோவை பகிர்ந்திருந்தார். தற்போது ஜக்கி வாசுதேவ் மகள் ராதே ஜக்கி, தனது தந்தையின் உடல் நலம் குறித்த அப்டேட்டை கொடுத்திருக்கிறார். இன்ஸ்டாகிராமில் ஜக்கி வாசுதேவின் படத்தை பகிர்ந்து, நலமுடன் இருப்பதாகவும், விரைவில் குணமடைந்து வருவதாகவும் கூறியுள்ளார். முன்னதாக ஈஷா அறக்கட்டளை வெளியிட்டிருந்த அறிவிப்பில், "சில நாட்களுக்கு முன்னர் சத்குரு அவசர சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டார். அவர் நன்றாக குணமடைந்து வருகிறார். கவலைப்பட ஒன்றுமில்லை. சத்குருவின் உடல்நிலையில், முன்னேற்றம் எதிர்பார்த்ததை விட சிறப்பாக உள்ளது. மருத்துவர்கள் கூறும்போது,'சத்குரு எங்களால் ஏற்படுத்தப்பட்ட மருத்துவ நடவடிக்கைகளைத் தாண்டி தன்னைத் தானே அவர் குணப்படுத்திக் கொள்கிறார்' என்றனர். சூழ்நிலைகள் கடுமையாக இருந்த போதிலும், மிகவும் சவாலான சூழ்நிலைகளைக் கூட எவ்வாறு அழகாக சமாளிக்க முடியும் என்பதை சத்குரு நிரூபித்துக் காட்டுகிறார்" என்று தெரிவிக்கப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.