யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் கவனயீர்ப்புப் போராட்டம்
வவுனியா - வெடுக்குநாறிமலை ஆதிசிவன் ஆலயத்தில் அரங்கேறிய அராஜகங்களை கண்டித்து யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் கவனயீர்ப்புப் போராட்டத்தை முன்னெடுத்திருந்தனர்.
நேற்று (19) மதியம் யாழ்ப்பாண பல்கலைக்கழக முன்றலில், பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்த கவனயீர்ப்புப் போராட்டத்தில் யாழ்ப்பாண பல்கலைக்கழக ஊழியர் சங்கத்தினரும் கலந்துகொண்டிருந்தனர்.
மாணவர்களின் போராட்டம் காரணமாக இராமநாதன் வீதியின் போக்குவரத்து சில மணி நேரம் தடைப்பட்டிருந்தது. போராட்டத்தில் ஈடுபட்டவர்கள், வடக்கும் கிழக்கும் தமிழர் தாயகம், வெடுக்குநாறி எங்கள் சொத்து, மயிலத்தமடு எங்கள் சொத்து, திட்டமிட்ட கைதுகளை நிறுத்து, சிங்கள பௌத்த மயமாக்கலை உடன் நிறுத்து, தையிட்டி எங்கள் சொத்து, நீராவியடி எங்கள் சொத்து, குருந்தூர்மலை எங்கள் சொத்து, மண் துறந்த புத்தருக்கு மண் மீது ஆசையா? உள்ளிட்ட பல கோஷங்களை எழுப்பினர்.