திருகோணமலையில் போதைப்பொருளுக்கு எதிரான விழிப்புணர்வு பேரணி
திருகோணமலை, குச்சவெளி பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட இளைஞர் கழகங்கள், சிறுவர் வள நிலையங்கள் இணைந்து போதைப்பொருளுக்கு எதிரான விழிப்புணர்வு பேரணி, இன்று (19) இடம்பெற்றது. நாவற்சோலை சிறுவர் வள நிலையத்திலிருந்து ஆரம்பிக்கப்பட்டுள்ள இப்பேரணியில், குச்சவெளி பிரதேச செயலகத்திற்குட்பட்ட இளைஞர் கழகங்களை சேர்ந்த இளைஞர்கள், சிறுவர்கள், பொதுமக்கள், அரச அரச சார்பற்ற நிறுவன அதிகாரிகள் உட்பட ஜநூறிற்கும் மேற்பட்டவர்கள் கலந்துகொண்டுள்ளனர். பேரணியானது நிலாவெளி பொலிஸ் நிலையத்தினை அடைந்து, நிலாவெளி பொலிஸ் அதிகாரிகளிடம் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது. இவ் அறிக்கையில், நாம், எமது இளைஞர்களை, எமது எதிர்கால சந்ததியினரின் வாழ்வியலை பாதிக்கும் போதைப்பொருள்பாவனையை எமது சமூகத்தில் இருந்து முற்றாக ஒழிப்பதற்கு உறுதி பூண்டுள்ளோம். இலங்கையில் போதைப்பொருள் பாவனை காரணமாக பல்லாயிரக்காணக்கான மாணவர்கள் புனர்வாழ்வு முகாம்களில் சிகிச்சைபெறுவதாக தெரியவருவதுடன், ஆண்டுதோரும் இவ்வெண்ணிக்கை அதிகரித்துவருவது கவலைக்குரிய விடயமாகும். போதைப்பொருள்பாவனை காரணமாக கல்வி, பொருளாதாரம், குடும்பம், சமூக அந்தஸ்த்து, ஆயுள் போன்றவற்றை இழப்பதுடன் ஏனைய குடும்ப உறுப்பினர்கள், நண்பர்கள், உறவினர்கள் சுற்றத்தாக்கும் ஆபத்தான நபர்களாக மாற்றும் போதைப்பொருட்களை, எமது சமூகத்தில் இருந்து முற்றாக ஒழிக்கவேண்டியது சமூகப்பற்றுமிக்க இளைஞர்களாகிய எமது கடமையாக உள்ளது. அந்தவகையில் • சமூகத்தின் மத்தியில் உள்ள போதைப்பொருள்பாவனைக்கு எதிரான விழிப்புணர்வு. • சமூகத்தின் மத்தியில் போதைப்பொருள் விற்பனைக்கு எதிரான சட்ட செயற்பாடுகள். போன்றவற்றை இளைஞர்களாகிய நாம் முன்னெடுக்கவுள்ளோம். மேலும் போதைப்பொருள் விற்பனைக்கு எதிரான தண்டனைகளை கடுமையாக்குமாறு அரசாங்கத்தை வேண்டுவதுடன், உளப்பூர்வமாக போதைப்பொருள் விற்பனை மற்றும் பாவனையை தடுப்பதற்கு உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறும், போதைப்பொருள் விற்பனையாளர்களை அடையாளம் காட்டும் நபர்களை பொறுப்புணர்வுடன் பாதுகாக்குமாறும் இலங்கை பொலிசாரிடம் வேண்டுகோள் விடுக்கின்றோம். அரச அரச சார்பற்ற நிறுவனங்கள் எமது சமூகச் செயற்பாடுகளுக்கு ஒத்துழைப்பையும் வழிகாட்டல்களையும் மேற்கொள்ளுமாறு வேண்டிநிற்கின்றோம். எமது பிரதேச இளைஞர்களை எமது சமூகத்தின் கல்வி, பொருளாதாரம் மற்றும் கலாச்சார எழுச்சிக்காக எம்முடன் அணிதிரளுமாறு வேண்டுகின்றோம். 'போதை நாட்டுக்கும், வீட்டுக்கும் கேடு' 'போதைப்பொருள்பாவனையை எமது சமூகத்தில் இருந்து முற்றாக ஒழிப்போம்' என தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து சென்ற பேரணியானது ஜெய்க்கா சிறுவர் வள நிலையத்தை அடைந்து 'போதைப்பொம்மை' எரிப்புடன் நிறைவு பெற்றது. இந்நிகழ்வில் பங்குபற்றிய இளைஞர்கள் 'நாம் இனிவரம் காலங்களில் போதைப்பொருள் வியாபாரிகளை வெளிப்படுத்துவதிலும் நாம் முன்னிற்போம் ' என தெரிவித்தனர்.