ஜனாதிபதி தேர்தலில் யாருக்கு ஆதரவு வழங்க வேண்டும்? - ஜீவன் தொண்டமான்
அடுத்த ஜனாதிபதி தேர்தலில் யாருக்கு ஆதரவு வழங்க வேண்டும் என்பது தொடர்பில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் உயர்பீடமே கூடி முடிவெடுக்கும். எமது தரப்பால் முன்வைக்கப்பட்டுள்ள கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டு, அதேபோல அடுத்த ஜனாதிபதி தேர்தலில் ரணில் விக்கிரமசிங்க போட்டியிடுவாராக இருந்தால் அவருக்கு ஆதரவு வழங்க முடியும் என்று இ.தொ.காவின் பொதுச்செயலாளரும் நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சருமான ஜீவன் தொண்டமான் தெரிவித்தார்.
இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் மகளிர் தின நிகழ்வுகள் மகளிர் அணியின் தலைவியும், கட்சியின் பிரதி தலைவருமான திருமதி.அனுஷியா சிவராஜா தலைமையில், மகளிர் அணியின் உப தலைவியும், மஸ்கெலியா பிரதேச சபையின் முன்னாள் தவிசாளருமான திருமதி.செண்பகவள்ளியின் ஏற்பாட்டில் “பொருளாதாரத்தை வலுவூட்டலின் ஊடாக பாலின சமத்துவத்தை துரிதப்படுத்தல்” எனும் தொனிப்பொருளின் கீழ் கொட்டகலை சி.எல்.எப். வளாக கேட்போர் கூடத்தில் நேற்று (10) நடைபெற்றது.
இதன்போது, பெண்களின் பல்வேறு பாரம்பரிய கலை, கலாசார நிகழ்வுகள், சிலம்பாட்டம், கும்மி நடனம், வீதி நாடகம், கிராமிய நடனங்கள் இடம்பெற்றது.
இதேவேளை, இந்நிகழ்வில் யுவதிகள் அணியின் பிரதம அமைப்பாளர் கனிஷ்டா மைக்கலின் ஏற்பாட்டில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் யுவதிகள் அணி அங்குரார்ப்பண வைபவமும் நடைபெற்றது.
அத்தோடு, சுயதொழிலை ஊக்குவிக்கும் முகமாக கலந்துக் கொண்ட பெண்களுக்கு மரக்கறி விதைகளும் வழங்கி வைக்கப்பட்டதோடு, கலந்துக் கொண்ட அதிதிகளுக்கு கௌரவிப்பும் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் பிரதம அதிதியாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சருமான ஜீவன் தொண்டமான் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.