சந்தேக நபரிடம் கைப்பற்றப்பட்ட கையடக்கத் தொலைபேசியை விற்பனை செய்த பொலிஸ் உத்தியோகத்தர் கைது
சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட நபரொருவரின் கையடக்கத் தொலைபேசியை 5 ஆயிரம் ரூபாவுக்கு விற்பனை செய்ததாக கூறப்படும் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர் அம்பாறை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் சாரதியாவார்.
கடந்த ஜூலை மாதம் 30 ஆம் திகதி அம்பாறை பிரதேசத்தில் நிகழ்வொன்றின் போது இடம்பெற்ற சம்பவம் ஒன்று தொடர்பில் சந்தேகத்தின் பேரில் நபரொருவர் கைது செய்யப்பட்டதுடன் அவரின் கையடக்கத் தொலைபேசியும் பொலிஸ் நிலையத்துக்குக் கொண்டு செல்லப்பட்டது.
இதன்போதே பொலிஸ் சாரதியான கான்ஸ்டபிள், கைது செய்யப்பட்ட நபரிடம் இருந்து கைப்பற்றப்பட்ட 58 ஆயிரம் ரூபா பெறுமதியான கையடக்கத் தொலைபேசியை 5 ஆயிரம் ரூபாவுக்கு வெளிநபர் ஒருவரிடம் விற்பனை செய்துள்ளார்.
இந்த கையடக்கத் தொலைபேசியின் உரிமையாளர் இது தொடர்பில் பொலிஸாரிடம் முறைப்பாடு அளித்துள்ளார். இதனையடுத்து சந்தேக நபரான பொலிஸ் உத்தியோகத்தர் அம்பாறை குற்றப் புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.