வெள்ளவத்தையில் பல கோடி ரூபாய் சொத்துக்களுடன் ஒருவர் கைது
கொட்டிகாவத்தை பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் ஒருவர் போதைப்பொருள் கடத்தல் மூலம் பெறப்பட்டதாக சந்தேகிக்கப்படும் பல கோடி ரூபாய் பெறுமதியான சொத்துக்களுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.
வெள்ளவத்தை பகுதியிலுள்ள தொடர்மாடி குடியிருப்பு ஒன்றில் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது பாரியளவிலான போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்டுவரும் ஷிரான் பாஷிக் என்பவரின் மகன் தப்பிச்சென்றுள்ளதாக தெரியவந்துள்ளது.
மேலும் கைது செய்யப்பட்ட சந்தேகநபர் ஷிரான் பாஷிக்கின் உதவியாளர் எனவும், சந்தேகநபர்கள் குறித்த வீட்டை மூன்றரை இலட்சம் ரூபாய் மாதாந்த வாடகை அடிப்படையில் பெற்று, அங்கிருந்து அவர்கள் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டிருக்கலாம் எனவும் பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேகநபரிடமிருந்து 12 வகையான தங்க நகைகள், 16 மாணிக்கக் கற்கள், ஒரு இலட்சம் ரூபாவுக்கு அதிகமான உள்ளூர் நாணயங்கள், 535 திர்ஹாம்கள் மற்றும் ஆயிரத்து 136 டொலர் என்பனவும் கைப்பற்றப்பட்டுள்ளன. அத்துடன், டுபாய் அரசாங்கத்தினால் நாதின் பாசிக் என்ற நபருக்காக வழங்கப்பட்ட அடையாள அட்டை, சாரதி அனுமதிப்பத்திரம் உள்ளிட்ட பல ஆவணங்களை பொலிஸ் விசேட அதிரடிப்படை அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.
மேலும், கைப்பற்றப்பட்ட போதைப்பொருள் உள்ளிட்ட சொத்துக்களுடன் சந்தேகநபர்கள், பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.