தமிழ்நாட்டிலும் பஞ்சுமிட்டாய் விற்பனைக்கு தடை
தமிழகத்தின் அண்டை மாநிலமான புதுவையில் சமீபத்தில் பஞ்சுமிட்டாய் விற்பனைக்கு தடை விதிக்கப்பட்ட நிலையில் தற்போது தமிழ்நாட்டிலும் பஞ்சுமிட்டாய் விற்க தடை விதிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
பஞ்சு மிட்டாயில் புற்றுநோயை உண்டாக்கும் வேதிப்பொருட்கள் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதால் தமிழகத்தில் பஞ்சு மிட்டாய் விற்பனை தடை
செய்யப்பட்டுள்ளது என மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அவர்கள் அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் கூறியிருப்பதாவது:
பஞ்சு மிட்டாயில் புற்றுநோயை உண்டாக்கும் வேதிப்பொருட்கள் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதால் தமிழகத்தில் பஞ்சு மிட்டாய் விற்பனை தடை செய்யப்பட்டுள்ளது.பஞ்சு மிட்டாய் மற்றும் நிறமூட்டப்பட்ட மிட்டாய் வகைகளை அரசு உணவு பகுப்பாய்வு கூடத்தில் ஆய்வு செய்ததில் Rhodaminbe-B எனப்படும் செயற்கை நிறமூட்டி சேர்க்கப்பட்டது கண்டறியப்பட்டுள்ளது. இது உணவு பாதுகாப்பு மற்றும் தரங்கள் சட்டம் - 2006 பிரிவு 3(1)பாதுகாப்பற்ற உணவு என உறுதி செய்யப்பட்டுள்ளது.
எனவே உணவு பாதுகாப்பு மற்றும் தரங்கள் சட்டம் - 2006 ன்படி Rhodamine-B எனப்படும் செயற்கை நிறமூட்டியை கொண்டு உணவுப் பொருட்களை தயாரித்தல், பொட்டலமிடுதல், இறக்குமதி செய்தல், விற்பனை செய்தல், திருமண விழாக்கள் மற்றும் பொது நிகழ்வுகள் ஆகியவற்றில் பரிமாறுதல் ஆகியவை உணவு பாதுகாப்பு மற்றும் தரங்கள் சட்டம் - 2006 ன்படி தண்டனைக்குரிய குற்றமாகும்.
மேலும், இது குறித்து ஆய்வு செய்து உணவு பாதுகாப்பு மற்றும் தரங்கள் சட்டம் - 2006 ன்படி கடுமையான நடவடிக்கை எடுக்க உணவு பாதுகாப்பு துறை ஆணையர் அவர்களால் அனைத்து உணவு பாதுகாப்பு அதிகாரிகளுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது என்று மாண்புமிகு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.