ஊட்டியில் மக்களை உறைய வைக்கும் உறைபனி
ஊட்டியில் இன்று காலை தாவரவியல் பூங்கா புல் மைதானம் வெள்ளை கம்பளம் விரித்தாற் போல உறைபனி படர்ந்து இருந்தது. ஊட்டி எச்.ஏ.டி.பி., மைதானம், ரேஸ்கோர்ஸ் மைதானம், காந்தல் கால்பந்து மைதானத்திலும் உறை பனி படிந்திருந்தது. இதுதவிர சூட்டிங்மட்டம், கோரகுந்தா, அவலாஞ்சி உள்ளிட்ட பகுதிகளில் உறைபனியின் தாக்கம் அதிகமாக காணப்பட்டது. சாலையோரம் மற்றும் வீட்டின் வெளியே நிறுத்தப்பட்டிருந்த கார், மோட்டார் சைக்கிள், வேன், வாகனங்களின் மீது உறைபனி கொட்டி கிடந்தது. அதிகாலையில் உறைபனியுடன் கடும் குளிரும் நிலவியது. குளிரில் இருந்து தப்பிக்க மக்கள், வாகன டிரைவர்கள் வீடுகள் மற்றும் ஆங்காங்கே நெருப்பு மூட்டி குளிர் காய்ந்தனர். தேயிலை தோட்ட தொழிலாளர்கள் சுவர்ட்டர் அணிந்தபடி தோட்டங்களில் தங்கள் பணியில் ஈடுபட்டனர்.
ஊட்டியில் இன்று அதிகபட்ச வெப்பநிலை, 23.7 டிகிரி செல்சியசாகவும், குறைந்தபட்ச வெப்பநிலை, 4 டிகிரி செல்சியசாகவும் பதிவாகியிருந்தது. இது புறநகர் பகுதிகளில் குறைந்து 2 டிகிரி செல்சியசாக பதிவாகி இருந்தது.
ஓரிரு நாட்களில் ஊட்டியில் வெப்பநிலையானது 0 முதல் மைனஸ் டிகிரிக்கு செல்ல வாய்ப்புள்ளது.
பனி பொழிவால் முகம், கை கால்களில் வெடிப்பு ஏற்பட்டு பொதுமக்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர். பெரும்பாலான இடங்களில் அதிகாலை நேரங்களில் தண்ணீர் ஐஸ் கட்டிகளாக மாறியுள்ளது.