உத்தரகாண்டில் மேலும் 5 இடங்களில் வீடுகளில் விரிசல்
உத்தரகாண்ட் மாநிலம் ஜோஷிமத் நகரத்தில் கடந்த சில நாட்களாக வீடுகளிலும், சாலைகளிலும் பெரிய அளவில் விரிசல் ஏற்பட்டு வருகிறது. அந்த நகரம் சிறிது சிறிதாக பூமிக்குள் புதைந்து வருகிறது. அங்குள்ள 678 வீடுகள் வசிக்க தகுதியற்றதாக அறிவிக்கப்பட்டது. இதையடுத்து பாதுகாப்பு கருதி அந்த வீடுகளில் உள்ளவர்கள் பாதுகாப்பாக வெளியேறுமாறு மாநில அரசு அறிவுறுத்தியது. இதைத்தொடர்ந்து முதல்கட்டமாக 82 குடும்பங்கள் இடமாற்றப் பட்டுள்ளன.
இந்நிலையில், ஜோஷிமத் நகரத்தை போலவே மேலும் 5 இடங்களில் வீடுகளில் விரிசல் ஏற்பட்டிருப்பது மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. குறிப்பாக தெஹ்ரி மாவட்டத்தில் நரேந்திர நகர் தொகுதியில் உள்ள பகுகுணா நகரில் சுமார் 50 வீடுகளில் விரிசல் ஏற்பட்டுள்ளது.
இதற்கு ரிஷிகேஷ்-கர்ணபிராயங்க் ரெயில்வே சுரங்க பாதை திட்டம் முக்கிய காரணமாக மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். இந்த திட்டத்தால் அப்பகுதியில் உள்ள அடாலி, குலர், வியாசி, கவுடியாலா மற்றும் மலேத்தா ஆகிய கிராமங்களும் பாதிக்கப்பட்டுள்ளதாக பொதுமக்கள் கூறுகின்றனர்.