சபரிமலைக்கு நடிகர் பேனர்களுடன் வந்தால் அனுமதி இல்லை
ஆண்டுதோறும் மார்கழி மாதத்தில் சபரிமலைக்கு பக்தர்கள் மாலை போட்டு விரதம் இருந்து தரிசனம் செய்ய செல்வது வழக்கம். கடந்த சில காலமாக தங்களுக்கு பிடித்த நடிகர்களின் படங்கள் வெற்றி பெறுவதற்காக கோவில்களுக்கு ரசிகர்கள் கால்நடை யாத்திரையாக செல்வது அதிகரித்துள்ளது.
சமீபத்தில் துணிவு, வாரிசு படங்களுக்காக வேண்டிகொண்டு சிலர் பட பேனர்களுடன் சபரிமலைக்கு புனித யாத்திரை மேற்கொண்டனர். பலரும் ஐயப்பனை வேண்டி மாலை போட்டு வரும் நிலையில் இந்த நடிகர்கள் மோகம் குறித்து கேரள உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், இனி சபரிமலையில் நடிகர்கள், அரசியல்வாதிகள் பேனர்களுடன் வரும் பக்தர்களை தரிசனத்திற்கு அனுமதிக்கக்கூடாது என்று தேவசம் போர்டுக்கு உத்தரவிட்டுள்ளது. இந்த ஆண்டு இந்த நடிகர் பேனர் பழக்கம் அதிகரித்ததால் ஆரம்பத்திலேயே தடுக்க இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.