பிரபாகரனைவிட தெற்கு பயங்கரவாதம் நாட்டில் பாரிய அழிவை ஏற்படுத்தியுள்ளது - நீதி அமைச்சர்
பிரபாகரனைவிட தெற்கு பயங்கரவாதம் பாரிய அழிவை நாட்டில் ஏற்படுத்தி இருக்கின்றது. அவ்வாறானதொரு நடவடிக்கையை மீண்டும் ஏற்படுத்தவே போராட்டம் மூலம் முன்னெடுக்கப்படுகிறது. அதற்கு நாட்டு மக்கள் இடமளிக்கக்கூடாது. அத்துடன் மக்கள் பலத்துடன் அதிகாரத்துக்கு வரமுடியாத மறைமுக அரசியல் சக்திகள் இந்த போராட்டத்துக்குள் மறைந்திருக்கின்றன. இது பாரிய நிலைமையாகும் என நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ் தெரிவித்தார்.
நீதி அமைச்சில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார். அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,
போராட்டத்தில் கலந்துகொண்டவர்கள் எவருக்கும் எந்தவித நெருக்கடியையோ அவர்களை கைதுசெய்யவோ கூடாது என பாதுகாப்பு பிரிவுக்கு தெரிவித்திருக்கின்றோம். அவர்கள் குற்றச்செயல்களை அனுமதிப்பதில்லை. அதேபோன்று இந்த போராட்டத்தின் மூலம் மக்களின் உயிர்களுக்கு ஆபத்து ஏற்படாமல் பாதுகாக்கவே அவசரகால சட்டம் அனுமதிக்கப்பட்டிருக்கின்றது. அவ்வாறு இல்லாமல் மக்களை அடக்குவதற்கு அவசரகால சட்டத்தை அமல் படுத்தவில்லை என தெரிவித்தார்.