அமைச்சர்கள் அரசியல் சூதாட்டத்தில் - சஜித்
250 இலட்சம் மக்கள் அனாதரவான நிலையில் இருக்கும் வேளையில் பாராளுமன்றத்தில் அமைச்சர்கள் அரசியல் சூது ஆடுகின்றனர் எனவும் 45 இலட்சம் மக்கள் வாழ்வாதாரத்தை ஈட்டும் சிறிய மற்றும் நடுத்தர கைத்தொழில் துறையினர் ஆதரவற்ற நிலையில் உள்ளதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.
குறித்த தொழில் துறையினர் சிரமங்களுக்கு ஆளாகியுள்ளனர் எனவும், அரசாங்கத்திலுள்ள எவரும் அது தொடர்பில் பொறுப்பல்லர் போன்றும் செயற்படுவதாகவும் தெரிவித்தார்.
சிறிய மற்றும் நடுத்தர கைத்தொழில் துறையினர் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் கலந்துரையாடுவதற்காக இன்று (28) கொழும்பிலுள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்திற்கு சமூகமளித்த பிரதிநிதிகள் குழுவொன்றுடன் இடம் பெற்ற சநதிப்பில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே எதிர்க்கட்சித் தலைவர் இவ்வாறு தெரிவித்தார். கண்மூடித்தனமான சுற்றறிக்கைகள் மூலம் பரெட் சட்டத்தை அமுல்படுத்துவதை அரசாங்கம் நிறுத்த வேண்டுமென வலியுறுத்திய எதிர்க்கட்சித் தலைவர், மக்கள் வாழ்வுக்கும் சாவுக்கும் இடையில் நெருக்கடியில் உள்ளனர் எனவும் தெரிவித்தார்.