100 நகரங்களை ஒரே தடவையில் அபிவிருத்தி செய்யும் நடவடிக்கை
நீண்ட காலமாக நாட்டில் அபிவிருத்தி செய்யப்படாத 100 நகரங்களை ஒரே தடவையில் அழகுபடுத்தி அபிவிருத்தி செய்யும் நடவடிக்கை இம்மாத இறுதியில் ஆரம்பிக்கப்படும் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையில் அலரி மாளிகையில் இன்று (14) நடைபெற்ற நகர அபிவிருத்தி அமைச்சின் முன்னேற்ற ஆய்வு கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.
சுபீட்சத்தின் நோக்கு கொள்கைக்கு அமைய பிரதான நகரங்கள் மற்றும் பிரதேச நகரங்களுக்கு இடையிலான ஏற்றத்தாழ்வுகளை குறைத்து, அனைத்து மக்களுக்கும் சமமான நகர வசதிகளை பெற்றுக்கொடுப்பதே இதன் நோக்கமாகும்.
நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சு மற்றும் நகர அபிவிருத்தி, கரையோரப் பாதுகாப்பு, கழிவுப் பொருள் அகற்றுகை, சமுதாய தூய்மைப்படுத்தல் இராஜாங்க அமைச்சின் கீழ் இயங்கும் நிறுவனங்கள் தொடர்பில் விடயத்திற்கு பொறுப்பான அமைச்சர் என்ற ரீதியில் பிரதமர் குறித்த கூட்டத்தில் முன்னேற்றத்தை மதிப்பாய்வு செய்தார்.
நகர அபிவிருத்தி அதிகார சபை இதுவரை செயற்படுத்தும் 60,000 வீடுகள் திட்டத்தில் குறைந்த வருமானம் பெறுவோருக்காக நிர்மாணிக்கப்பட்டு வரும் 32,000 வீடுகளின் முன்னேற்றம் குறித்து பிரதமர் இதன்போது கேட்டறிந்தார்.
கொலன்னாவ, டொரின்டன், புளுமெண்டல், பேலியகொட மற்றும் ஒறுகொடவத்த பிரதேசங்கள் மற்றும் கண்டி, குருநாகல், அனுராதபுரம் மற்றும் பொலனறுவையில் புதிதாக செயற்படுத்தப்படும் நடுத்தர வகுப்பினருக்கான வீடமைப்பு திட்டம் குறித்து கலந்துரையாடப்பட்டது.
குறைந்த வருமானம் பெறுவோருக்காக மஹரகம, நுகேகொட மற்றும் கோட்டை ஆகிய பகுதிகளில் புதிதாக வீடமைப்பு திட்டங்கள் செயற்படுத்தப்பட்டு வருவதுடன், கோட்டை வீடமைப்பு திட்டம் விரைவில் ஆரம்பிக்கப்படவுள்ளது.
தனியார் முதலீட்டாளர்களுடன் இணைந்து மேலும் 12,000 வீடுகளை நிர்மாணிப்பதற்கு நகர அபிவிருத்தி அதிகாரசபை நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. தற்போதுள்ள நடைபாதைகளுக்கு மேலதிகமாக 25 மாவட்டங்களில் புதிதாக மேலும் 28 நடைபாதைகள் நிர்மாணிக்கப்படும்.
கொழும்பு நகரிலுள்ள பண்டைய கட்டிடங்களை புனரமைப்பது தொடர்பில் கவனம் செலுத்திய பிரதமர், குறித்த கட்டிடங்கள் புனரமைக்கப்பட்ட பின்னர் அவற்றை பராமரிப்பது தொடர்பில் கவனம் செலுத்துமாறு அமைச்சின் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.
புனரமைப்பின் பின்னர் அக்கட்டிடங்கள் முறையாக பராமரிக்கப்படாவிடின் அவை மீண்டும் பழைய நிலைக்கு தள்ளப்படும் என பிரதமர் சுட்டிக்காட்டினார்.