மீனவர்களை நிர்வாணமாக்கிய தமிழகம் சென்று திரும்பிய கடற்றொழில் அமைச்சரும் தமி்ழ் தேசிய MP க்களும்
இலங்கையின் கடற்றொழில் அமைச்சர் சந்திரசேகரன் மற்றும் தமிழ் மக்களின் மீது அக்கறையுள்ளதாக தமிழ் தேசியம் பேசும் நாடாளுமன்ற உறுப்பினர்களான சிறீதரன், சாணக்கியன், செல்வம் அடைக்கலநாதன், சுமந்திரன் ஆகியோர் தமிழ் நாடு அரசினால் அழைக்கப்பட்டு அயலக தமிழகம் நிகழ்வில் சிறப்பு விருந்தினர்களாக அலங்கரிக்க கடந்தவாரம் தமிழகம் சென்றிருந்தனர்.
இந்தப் பயணத்தின்போது தமிழக மீன்பிடியாளர்களால் வடக்கின் கடற்றொழிலாளர்கள் படும் அவலங்களையும் சட்டவிரோத அடாவடிகளையும் அதனால் எமது மீனவர்கள் இழந்துவரும் பொருள் இழப்பு வள இழப்புக்களையும் தமிழக அரசிடம் குதிப்பாக முதல்லர் ஸ்டாலினிடம் நேரில் எடுத்துக் கூறுவார்கள் என்ற எதிர்பார்ப்புடன் கூடிய நம்பிக்கை கடற்றொழில் சமூகத்தினர் மட்டத்தில் மட்டுமல்லாது இலங்கையின் அரசியல் பரப்பிலும் வலுப்பெற்றது.
ஆனால் இலங்கையில் இருந்து தமிழகத்துக்கு சென்ற குறித்த தரப்பினர் தங்களை பெருமைப்படுத்திக்கொள்ளும் காட்சிப் பொம்மைகளாக மேடையை அலங்கரித்துவிட்டு வந்தனரே தவிர கடற்றொழிலாளர்களது எதிர்பார்ப்புகள் சிறிதேனும் நிறைவு செய்யப்படவில்லை. இதனால் தமது எதிர்பார்புகக்களை குறித்த தமிழ் அரசியல் அதிகார தரப்பினர் நிர்வாணப்படுத்திவிட்டதாக இலங்கையின் வடபகுதி கடற்றொழிலாளர்கள் கவலையுடன் கூறுகின்றனர்.
முன்பதாக கடற்றொழில் அமைச்சர் சந்திரசேகரன் மற்றும் தமிழ் மக்கள் மீது கரிசனை காட்டுவதுபோன்று வீரப்பேச்சுக்கள் பேசிவரும் நாடாளுமன்ற உறுப்பினர்களது இந்த பயணத்தால் தமிழக சட்டவிரோத மீன்பிடியாளர்களது பிரச்சினை தொடர்பில் ஒரு தீர்க்கமான நிலை உருவாகும் என வடபகுதி மீனவர்களிடையே மட்டுமல்லாது அரசியல் வல்லுனர்களிடையேயும் பெரும் எதிர்பார்ப்பு உருவாகியிருந்தது.
இந்நிலையில் இந்திய கடற்றொழிலாளர்கள் பிரச்சினை தொடர்பாக தமிழக முதலமைச்சருடன் பேசுவதற்கு சந்தர்ப்பம் கோரியுள்ளதாக தமிழகம் சென்றுவந்த நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் கூறியுள்ளார்.
அதுமட்டுமல்லாது “வெகு விரைவில் இந்திய - இலங்கை கடற்றொழிலாளர்கள் பிரச்சினை தொடர்பான சந்திப்பு நடைபெறும் என்றும் கிளிநொச்சியில் நடைபெற்ற தைப்பொங்கல் நிகழ்வில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்திருந்தார்.
அதுமட்டுமல்லாது மேலும் ஒரு படி மேல் சென்று தமிழக அரசின் அழைப்பில் அயலகத்தமிழர் தின நிகழ்வில் கலந்து கொண்ட போது தமிழக முதலமைச்சரிடம் தான் இவ்வாறு கோரிக்கை விடுத்திருந்ததாகவும் இலங்கையின் ஊடகங்களுக்கு வழமைபோன்று தனது புலுடா அரசியலை காட்டியுள்ளார்.
இதேவேளை மாற்றத்தை காட்டுவோம் என வீரப்பு பேசி ஆட்சிக்கு வந்த அனுர அரசின் அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சரும் கடற்றொழில் அமைச்சருமான சந்திரசேகரன் இலங்கையில் தடை செய்யப்பட்டுள்ள மீன்பிடி முறைமைகளை தமிழக அரசாங்கமும் தடைசெய்வதற்கு உடனடியாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என தமிழகத் தொலைக்காட்சியொன்றுக்கு வழங்கிய நேர்காணல் தெரிவித்திருந்தார்.
இதனூடாக அவர் முதலமைச்சருடன் இவ்விடயம் தொடர்பில் தான் நேரில் எதுவும் பேசவில்லை என்பதை கூறியுள்ளார்
ஆக இவ்விரு தரப்பினரது கருத்துக்களையும் பார்க்கும்போது தமிழக முதல்வர் ஸ்ராலினுடன் பேசியதெல்லாம் இலங்கை இந்திய மக்கள் சார்ந்ததாகவோ அல்லது நாடுகளின் நலன் சார்ந்ததாகவோ அல்லாது அருகே நின்று புகைப்படங்கள் எடுக்க மட்டும் தான் என்பது வெளிப்படையாக தெரிவின்றது.
யுத்தம் நிறைவடைந்த பின்னரான காலங்களில் இலங்கையின் கடற்றொழில் அமைச்சராக இருந்த பெரும்பான்மை இனத்தை சேர்ந்த அமைச்சர்களானாலும் சரி, கடந்த அரசில் கடற்றொழில் அமைச்சராக இருந்த டக்ளஸ் தேவானந்தாவாக இருந்தாலும் சரி தமிழகத்தின் முதலமைச்சர்களை, கடற்றொழிலாளர்கள் பிரச்சினையை தீர்ப்பதற்காக சந்திக்க பலமுறை கோரிக்கைகள் விடுத்து நேரத்தை ஒதுக்கி தருமாறு கோரியிருந்தபோதும் தமிழக முதல்வர்கள் அவ்வாறான எமது நாட்டின் முயற்சிக்கு ஒத்துழைப்பு எதனையும் வழங்கியிருக்கவில்லை.
இது இலங்கையின் வடக்கு கடற்றொழிலாளர்கள் அனைவருக்கும் நன்கு தெரிந்த விடயம். இதனால் பல போராட்டங்களையும் வடபகுதி மீனவர்கள் இந்திய அரசுக்கு எதிராகவும் இலங்கை அரசுக்கு எதிராகவும் மேற்கொண்டு இருந்ததையும் மறக்கமாட்டார்கள்.
இதேநேரம் கடந்த ஆட்சியில் இருந்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஒருபடி மேல் சென்று கடற்றொழிலாளர் பிரச்சினையை தீர்ப்பதற்காக பல்வேறு முயற்சிகள் மேற்கொண்டது மட்டுமல்லாது அதிகாரிகள் மட்டத்தில் ஏறக்குறைய 7 தடவைகள் அதிகார பூர்வ பேச்சுக்களையும் இராஜதந்திர மட்டத்தில் முன்னெடுத்திருந்தார்.
அதுமட்டுமல்லாது தமிழக - வடபகுதி மீனவர்களையும் கச்சதீவில் ஒருங்கிணைத்து பேச்சுக்களிலும் ஈடுபடவைத்தது மட்டுமன்றி வடபகுதி மீனர்களின் துன்பங்களை தமிழக மீனவருக்கும் நேரில் தெரிவிப்பதற்கும் வாய்ப்பையும் உருவாக்கி கொடுத்திருந்தார்.
ஆனாலும் இது எதனையும் தமிழக தரப்பு கணக்கெடுக்காது தமது சட்டவிதோர செயல்களை தொடர்ந்தும் இலங்கையின் கடற்பரப்பில் முன்னெடுத்து வந்திருந்தனர். இதனால் பல கைதுகளும் ஏன் உயிரிழப்புகள் கூட ஏற்பட்டிருந்தது.
இவ்வாறான பின்னணியில் தற்போது கடந்த கால அமைச்சருக்கோ அன்றி அதிகாரிகளுக்கோ கிடைக்காத வாய்ப்பு தற்போதைய கடற்றொழில் அமைச்சர் சந்திரசேகனர் மற்றும் தமிழ் நாடாளுமன்ற உறப்பினர்களான சிறீதரன், சுமந்திரன் சாணக்கியன், செல்வம் அடைக்கலநாதன் ஆகியோருக்கு கிடைத்திருந்தது.
அதுவும் தமிழக அரசே தாம் ஏற்பாடு செய்திருந்த நிகழ்வொன்றில் கலந்துகொள்ள இவர்களுக்கு அழைப்பு விடுத்தும் இருந்தது.
ஆனால் தமிழகம் சென்ற இவர்கள் பொம்மைகள் போன்று தலையாட்டிகளாகவே மேடையில் இருந்துவிட்டு, செல்பிகளை எடுத்துவிட்டு வந்துள்ளனரே தவிர மீனவர் பிரச்சினை தொடர்பில் வாய் திறக்காது மொனமாக இருந்துவிட்டு நாடு திரும்பியுள்ளனர்.
இதனால் வடக்கின் கடற்றொழிலாளர்கள் அவலங்களையும் தமிழக மீனவரின் சட்டவிரோத அடாவடிகளையும் தடுக்க இலங்கை கடற்படை மேற்கொள்ளும் முயற்சிகளை கண்டித்து டெல்லிக்கு கடிதம் எழுதும் ஸ்டாலினுக்கு வடபகுதி கடற்றொழிலாளர்களது நிலையை எடுத்துக் கூறி தமிழக மீன்பிடியாளர்களது அடாவடிக் குறித்து எதுவித அழுத்தத்தையோ ஏன் சாதாரண ஒரு எதிர்ப்பையோ எடுத்துக் கூறி ஸ்ராலினிடம் கூறியதை தமிழக ஊடகங்களுக்கு வெளிப்படையாக ஊடக சந்திப்பு வைத்துக் கூறிவிட்டு ஊருக்கு வருவார்கள் என எதிர்பார்த்திருந்த கடற்றொழிலார்களுக்கு பெரும் ஏமாற்றத்தை கொடுத்துள்ளது.
இதேவேளை JVP இன் பின்னிணியில் அமைச்சர் சந்திரசேகரன் இருந்தாலும் அவர் இந்திய பூர்வீகத்தை கொண்டவராக இருப்பதால் வடக்கின் மினவர் சார்பில் இலங்கையில் குரல் கொடுப்பது போன்று செயற்பட்டாலும் அவர் தமிழக நலனை முதன்மைப்படுத்துவார் என வடபகுதி மக்கள் அரசல்புரசலாக பேசுவதும் உண்டு. ஆனால் ஏனைய தமிழ் தேசிய MP க்களாவது வாய் திறந்து பேசி அமைச்சருக்கும் அழுத்தத்தை கொடுத்திருக்கலாம் என்பதே வடக்கின் கடற்றொழிலாளர்களது வேதனையாக இருக்கின்றது.
ஆக. வழமை போன்று கையருகே கிடைத்த அரிய வாய்ப்பை தமிழ் தேசியத் தரப்பினர் மறுபடியும் தவறவிட்டுவிட்டு இலங்கை கடற்றொழிலாளர்களை முட்டாள்களாக்க இலங்கை ஊடகங்களில் தங்களது வீர வசனங்களை முழங்குவது வேடிக்கையாக உள்ளது.
000