கொழும்பு பங்குச் சந்தையை டிஜிட்டல் மயப்படுத்தலின் இரண்டாம் கட்டச் செயற்பாடுகள் ஆரம்பம்
கொழும்பு பங்குச் சந்தையை டிஜிட்டல் மயப்படுத்தலின் இரண்டாம் கட்டச் செயற்பாடுகள், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில், ஜனாதிபதி அலுவலகத்தில் அண்மையில் ஆரம்பமானது.இலங்கை பிணையங்கள் மற்றும் பரிவர்த்தனை ஆணைக்குழு (SEC), கொழும்பு பங்குப் பரிவர்த்தனை (CSE) மற்றும் இலங்கை மூலதனச் சந்தை ஆகியவற்றை டிஜிட்டல் மயப்படுத்தும் செயற்பாட்டின் முதற்கட்டம், கடந்த ஆண்டு செப்டெம்பர் மாதம் ஆரம்பிக்கப்பட்டது. முதலீட்டாளர்களின் பங்குக் கொடுக்கல் வாங்கல் நடவடிக்கைகளை உடனடியாக உறுதிப்படுத்துதல், நிறுவனச் செயற்பாடுகள் குறித்து முதலீட்டாளர்களை அறிவூட்டுதல், முதலீட்டு வாய்ப்புகளை விரிவுபடுத்துதல் உள்ளிட்ட பல்வேறு நன்மைகளை ஏற்படுத்திக் கொடுப்பது இதன் நோக்கமாகும்.டிஜிட்டல் மயப்படுத்தல் அறிமுகப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து, பங்குச் சந்தை விவரங்களைத் தரவிறக்கம் செய்வது விரைவுபடுத்தப்படுவதால், 65,000 புதிய முதலீட்டாளர்களையும் கடந்து, 17,000 புதிய மத்திய வைப்புத்திட்ட முறைமை கணக்குகள் (CDS) ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக, பங்குச் சந்தை கட்டுப்பாட்டு அதிகாரசபை சுட்டிக்காட்டியுள்ளது.இந்த டிஜிட்டல் மயப்படுத்தல் நடவடிக்கையைத் தொடர்ந்து, முதலீட்டாளர்களுக்கு உலகில் எந்தவோர் இடத்திலிருந்தும் சிங்களம், தமிழ் அல்லது ஆங்கிலம் ஆகிய மும்மொழிகளில் கொடுக்கல் வாங்கல்களை மேற்கொள்ளல், மாதாந்தக் கூற்றுகளைப் பெற்றுக்கொள்ளல், தகவல் பரிமாற்றங்களை மேற்கொள்ளல் என்பவற்றுடன், உள்நாட்டு நிறுவனங்களால் கணக்குகளைத் திறப்பதற்கான வாய்ப்புகளும் கிடைக்கும்.ஜனாதிபதியின் செயலாளர் பி.பீ.ஜயசுந்தர, பிணையங்கள் மற்றும் பரிவர்த்தனை ஆணைக்குழுவின் தலைவர் ஜனாதிபதி சட்டத்தரணி விராஜ் தயாரத்ன, கொழும்பு பங்குப் பரிவர்த்தனையின் தலைவர் துமித் பெர்னாண்டோ ஆகியோர் உள்ளிட்ட பணிப்பாளர் சபை உறுப்பினர்கள், இந்த நிகழ்வில் கலந்துகொண்டிருந்தனர்.