ஒலிம்பிக் வென்ற வீரர்களுக்கு வடகொரியா கொடுத்த தண்டனை
வடகொரியா நாட்டை கிம் ஜாங் அன் ஆட்சி செய்து வரும் நிலையில் மிகவும் கெடுபிடியான கட்டுப்பாடுகள் அங்கு நடைமுறையில் உள்ளன. மேலும் பல ராக்கெட், ஏவுகணை சோதனைகளை செய்து அண்டை நாடான தென் கொரியாவிற்கு தொடர்ந்து தொல்லை கொடுத்து வருவதுடன், தென் கொரியாவுடனான எல்லைகளையும் மூடியுள்ளது வடகொரியா. தென்கொரியாவை எதிரி நாடாக கருதுவதுடன் குப்பை பலூன்களை தென்கொரியாவுக்குள் அனுப்பி விதவிதமாக தொல்லைகளை கொடுத்து வருகிறது.
இதனால் வட கொரியர்கள் எந்த வகையிலும் தென்கொரியர்களுடன் தொடர்பில் இருக்கக் கூடாது என்பதையும் வடகொரியா கெடுபிடியாக கடைப்பிடிக்கிறது.
சமீபத்தில் பாரிஸில் நடந்து முடிந்த ஒலிம்பிக்ஸ் போட்டிகளில் வடகொரியா வீரர்களும் கலந்து கொண்டனர். அதில் டேபிள் டென்னிஸ் போட்டியில் வடகொரிய வீரர்கள் ரி ஜோங் சிக் மற்றும் கிம் கும் யோங் ஆகியோர் இரட்டையர் பிரிவில் வெள்ளிப்பதக்கம் வென்றனர். அப்போது அவர்கள் தென் கொரிய வீரர்களுடன் மேடையில் சிரித்தபடி செல்ஃபி எடுத்துக் கொண்டனர்.
தென்கொரிய வீரர்களுடன் எந்த தொடர்பும் கொள்ளக்கூடாது என்று கட்டுப்பாடுகளை விதித்து வடகொரியா அனுப்பியிருந்த நிலையிலும் இவ்வாறு செல்ஃபிக்கு சிரித்ததால் நாடு திரும்பிய ஒலிம்பிக் வீரர்களை விசாரணை வளையத்திற்குள் கொண்டு வந்துள்ளதாம் வடகொரியா. அவர்களுக்கு தென்கொரியாவின் கலாச்சார பாதிப்பு மனதளவில் ஏற்பட்டுள்ளதா என மனோதத்துவ பரிசோதனை நடத்தப்படுவதுடன், ஒழுங்கு நடவடிக்கையும் எடுக்கப்பட்டுள்ளதாக வெளியாகியுள்ள தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.