பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் எலி தொல்லை
பாகிஸ்தான் நாடாளுமன்றம் ஒரு பெரும் பிரச்னையைச் சந்தித்து வருகிறது. ஆனால் இது அரசியல் ரீதியாக அல்ல. அரசியல்வாதிகளுக்கும் இதற்கும் ஒரு சம்பந்தமும் இல்லை.
நாடாளுமன்ற கட்டடத்தில் பெரும் எண்ணிக்கையில் அங்கும் இங்கும் ஓடி, அலுவலகங்களை இரவுநேர ''மாரத்தான்'' பந்தையப் பாதையாக மாற்றும் எலிகளால்தான் பிரச்னை. குறிப்பாக பெருச்சாளிகள்.
கடந்த 2008ஆம் ஆண்டு முதல் நடந்த கூட்டங்களின் பதிவேடுகளைப் பார்க்க, ஒரு அதிகாரப்பூர்வ குழு உத்தரவிட்ட போதுதான் இந்தப் பிரச்னை வெளிச்சத்திற்கு வந்தது. அந்தப் பதிவேடுகள் பெரும்பாலானவை எலிகளால் மோசமாகக் கடிக்கப்பட்டு இருக்கிறது என்பது கண்டறியப்பட்டது.
எலிகளின் தொல்லை இப்போது மிகவும் அதிகமாக உள்ளது. இதனால் நாடாளுமன்றத்தை எலிகள் இல்லாத பகுதியாக மாற்றுவதற்கு ஆண்டு பட்ஜெட்டில் 12 லட்ச ரூபாய் (பாகிஸ்தான் ரூபாய்) ஒதுக்கப்பட்டுள்ளது.
பெரும்பாலான எலிகள் முதல் தளத்தில் இருப்பது போல் இருக்கிறது. இந்தத் தளத்தில் செனட் எதிர்க்கட்சித் தலைவரின் அலுவலகம் மட்டுமல்லாமல், பெரும்பாலான அரசியல் கட்சிக் கூட்டங்கள் மற்றும் நிலைக்குழு கூட்டங்களும் நடக்கின்றன. நாடாளுமன்றத்தின் உணவுக்கூடம் இங்கு இருப்பதாலும், எலிகள் இங்கு அதிகமாக இருக்கலாம்.
நாடாளுமன்றத்திலிருந்து எலிகளை விரட்டுவதற்கு ஒரு பூச்சி மருந்து நிறுவனத்தைக் கண்டுபிடிப்பதற்காக, பல பாகிஸ்தான் செய்தித்தாள்களில் இப்போது விளம்பரங்கள் வெளியாகியுள்ளன. இதுவரை, இரு நிறுவனங்கள் மட்டுமே இதற்கு ஆர்வம் காட்டியுள்ளன.
எலிகளை விரட்டுவதற்கு, எலிக்கொல்லி மருந்துகள், எலிப்பொறிகள் ஆகியவற்றுடன் பூனைகளையும் வழங்குமாறு இப்பணியில் அமர்த்தப்படும் நிறுவனங்களுக்கு அறிவுறுத்த இஸ்லாமாபாத் தலைநகர் மேம்பாட்டு ஆணையத்திற்கு சிறப்பு வழிகாட்டுதல்கள் அளிக்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற அதிகாரி ஒருவர் கூறுகிறார். பூனைகள் நாடாளுமன்ற கட்டடத்தின் வெவ்வேறு பகுதிகளில் விடப்படும் என்று அதிகாரி ஒருவர் கூறுகின்றார். இஸ்லாமாபாத்தில் உள்ள நாடாளுமன்றத்தைத் தவிர இந்த எலிகள் அருகில் இருக்கும் குடியிருப்புகளையும் நாசம் செய்திருக்கின்றன.