முதலாம் தரத்திற்கு மாணவர்களை உள்வாங்குவதற்கான சுற்றறிக்கை வெளியானது - சிற்றுண்டிச்சாலைகளில் வழங்கப்படும் உணவுப் பொருட்களின் தரம் தொடர்பில் ஆராயவும் நடவடிக்கை
2025 ஆம் ஆண்டிற்கான முதலாம் தரத்திற்கு மாணவர்களை உள்வாங்குவதற்கான சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
கல்வி அமைச்சினால் இந்தச் சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
இதேவேளை பாடசாலைகளில் காணப்படும் சிற்றுண்டிச்சாலைகளில் வழங்கப்படும் உணவுப் பொருட்களின் தரம் தொடர்பில் ஆராயப்படவுள்ளது.
அவ்வாறான சிற்றுண்டிச்சாலைகளில் வழங்கப்படும் உணவுப் பொருட்களின் தரம் தொடர்பில் பல்வேறு முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாகக் கல்வி இராஜாங்க அமைச்சர் அருணாச்சலம் அரவிந்த குமார் தெரிவித்துள்ளார்.
இந்த விடயம் தொடர்பில் பொதுச் சுகாதாரப் பரிசோதகர்களுக்கு அறிவித்தல் வழங்குவதற்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
இதேவேளை அனைத்து அரச பாடசாலைகளின் கல்விச் செயற்பாடுகளும் இன்று வழமை போன்று இடம்பெறும் எனக் கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, கடந்த இரண்டு நாட்களாக ஆசிரியர்கள், அதிபர்கள் முன்னெடுத்த சுகவீன விடுமுறை போராட்டம் வெற்றி அளித்துள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ள நிலையில் மாணவர்களின் கற்றல் செயற்பாடுகளுக்காக ஆசிரியர்கள் காலை வேளையில் பாடசாலைகளில் இருப்பது கட்டாயமானது என்றும், எதிர்வரும் நாட்களில் அவ்வாறு நடக்காமல் போனால் ஆசிரியர் சேவை அத்தியாவசிய சேவையாக அறிவிக்கப்படும் என்றும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது
000