எதிர்காலத்தில் IMF இன் ஒத்துழைப்பின்றி வலுவான பொருளாதாரம் கட்டியெழுப்பப்படும் - ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவிப்பு
இலங்கை கடன்வழங்குனர்களுடன் ஏற்படுத்திக்கொண்ட மறுசீரமைப்பு உடன்படிக்கைகளை சர்வதேச நாணய நிதியம் வரவேற்றுள்ளது என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
நேற்றிரவு நாட்டு மக்களுக்கு ஆற்றிய விசேட உரையின் போதே ஜனாதிபதி இதனை தெரிவித்திருந்தார்.
இதன்போது தனியார் கடன்வழங்குனர்களுடன் விரைவில் இணக்கப்பாடு ஏற்படுத்திக்கொள்ளப்படும் என நம்புவதாகவும் எதிர்வரும் காலங்களில் நாட்டில் மீண்டும் சர்வதேச நாணய நிதியத்தின் ஒத்துழைப்பு இன்றி வலுவான வினைத்திறனான வளர்ச்சியடைந்த பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதற்காக கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் ஜனாதிபதி ரணில்விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்
மேலும் இலங்கைக்கு இதற்கு முன்னர் 16 தடவைகள் சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து உதவிகள் கிடைத்துள்ள போதிலும் ஒவ்வொரு முறையும் தோல்வியடைந்துள்ளதாகவும் ஜனாதிபதி இதன்போது குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் நிபந்தனைகளை மீறியமை வாக்குறுதிகளை நிறைவேற்றதவறியமை நிதி ஒழுக்கத்தை பின்பற்றாமை போன்ற காரணிகளினாலேயே கடந்த சந்தர்ப்பங்களில் தோல்வியை தழுவ நேரிட்டதாகவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.
எவ்வாறாயினும் கடந்த 16 தடவைகள் சர்வதேச நாணய நிதியத்தின் ஒத்துழைப்பை நாடிய போது வங்குரோத்து அடைந்த நாடாக இருக்கவில்லை என்பதனையும் ஜனாதிபதி இதன்போது குறிப்பிட்டுள்ளார்.
எனினும் வங்குரோத்து நாடாக உதவி கோரி, அந்தத் திட்டத்தை வெற்றிபெறச் செய்வதற்கு தலைமைத்துவம் வழங்கியதையிட்டு தான் மகிழ்ச்சி அடைவதாக ஜனாதிபதி ரணில்விக்ரமசிங்க மேலும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை இலங்கைக்கு கடன் வழங்கிய நாடுகளுடனான இருதரப்பு கடன் மறுசீரமைப்பு தொடர்பான இறுதி இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளதன் ஊடாக வெளிநாடுகளில் உள்ள அனைத்து இருதரப்பு கடன் தவணைகளையும் 2028 ஆம் ஆண்டுவரை ஒத்திவைக்க முடியும் எனவும், அதன்பின்னர் சலுகை நிபந்தனைகள் அடிப்படையில் அனைத்து கடன்களையும் செலுத்துவதற்க 2043 வரை நீண்டகால அவகாசம் கிடைக்கப்பெறும் எனவும் ஜனாதிபதி ரணில்விக்ரமசிங்க மேலும் தெரிவித்துள்ளார்.
இலங்கை கடனை மறுசீரமைப்பதில் வெற்றி பெற்றுள்ளதுடன் வெளிநாட்டு நிதியைப் பயன்படுத்தி முன்னெடுத்த அனைத்து திட்டங்களையும் மீண்டும் ஆரம்பிப்பதற்கு சட்டபூர்வ வாய்ப்புகள் ஏற்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
கடனை செலுத்த முடியாமல் வங்குரோத்தான நாடென்று அடையாளப்படுத்தப்பட்ட ஒரு நாடு இரண்டு வருடங்களில் இந்தளவு முன்னேற்றத்தைப் பெற முடிந்திருப்பது வரலாற்று வெற்றியாகும் எனவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
இதனிடையே ஜனாதிபதி ரணில்விக்ரமசிங்கவின் விசேட உரையினை தொடர்ந்தும் நேற்று இரவு நாட்டின் பல்வேறு பகுதிகளில் ஐக்கிய தேசியக் கட்சி அதரவாளர்கள் பட்டாசு கொளுத்தி மகிழ்ச்சியை வெளிப்படுத்தியிருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
000