வவுனியா - கூமாங்குளத்தில் வீடு கையளிப்பு
வவுனியா, கூமாங்குளம் பகுதியில் வறுமைக் கோட்டிற்கு உட்பட்ட குடும்பம் ஒன்றுக்கு வீடு ஒன்று கையளிக்கப்பட்டுள்ளது.
நம் தாயகம் நிறுவனத்தின் உரிமையாளரின் நிதி உதவியில் மாணிக்கதாசன் நற்பணி மன்றத்தால் கட்டப்பட்ட குறித்த வீடு இன்று (09) கையளிக்கப்பட்டது.
மூன்று அங்கத்தவர்களைக் கொண்ட குறித்த குடும்பம் வறுமைக் கோட்டின் கீழ் கொட்டில் வீட்டில் வசித்து வந்த நிலையில், அக் குடும்பத்தின் உறைவிடத் தேவையை பூர்த்தி செய்யும் முகமாக ஒரு இலட்சத்து 75 ஆயிரம் ரூபாய் செலவில் இந்த வீடு அமைக்கப்பட்டு கையளிக்கப்பட்டது.
இந்நிகழ்வில் பிரதேச செயலாளர் நா.கமலதாசன், வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபை தலைவர் யோகராசா, செட்டிகுளம் பிரதேச சபைத் தலைவர் ஜெகதீஸ்வரன், முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் மயூரன், வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபை உறுப்பினர் சந்திரபத்மன், கலைஞர் மாணக்கம் ஜெகன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.