முன்னாள் மத்திய அமைச்சர் ரெங்கராஜன் குமாரமங்கலம் மனைவி டெல்லியில் கொலை
மறைந்த முன்னாள் மத்திய அமைச்சர் ரங்கராஜன் குமாரமங்கலத்தின் மனைவி கிட்டி குமாரமங்கலம் நேற்று இரவு அவரது வீட்டில் கொலை செய்யப்பட்டுள்ளார்.
டெல்லி வசந்த் விஹாரில் உள்ள மறைந்த ரங்கராஜன் குமாரமங்கலத்தின் மனைவி கிட்டி குமாரமங்கலத்தின் வீட்டில், செவ்வாய்க்கிழமை இரவு நடந்த கொள்ளை முயற்சியின்போது அவர் கொலை செய்யப்பட்டுள்ளார் என காவல்துறையினர் தெரிவித்தனர்.
குற்றம் சாட்டப்பட்ட நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர். கைது செய்யப்பட்ட ராஜு (வயது 24), கிட்டி குமாரமங்கலத்தின் வீட்டில் துணி துவைக்கும் வேலை செய்தவர் என அடையாளம் காணப்பட்டுள்ளதாக துணை போலீஸ் கமிஷனர் இங்கிட் பிரதாப் சிங் தெரிவித்தார்.
இரவு வீட்டுக்குள் நுழைந்த ராஜூ மற்றும் அவரின் கூட்டாளிகள் இரண்டு பேர் உள்ளே நுழைந்து கிட்டியைத் தாக்கியுள்ளனர். அதைத் தொடர்ந்து அவரை தலையணையால் அழுத்தி கொலை செய்துள்ளனர்.
குற்றம் நடந்த இடத்தில் சூட்கேஸ்கள் திறக்கப்பட்டுள்ளதாகவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. தற்போது ராஜு கைது செய்யப்பட்டுள்ளதாகவும், அவரது இரண்டு கூட்டாளிகளைத் தேடி வருவதாகவும் போலீசார் தெரிவித்தனர்.