ராணுவ விமானம் விழுந்து 29 பேர் உயிரிழப்பு
பிலிப்பைன்ஸ் நாட்டின் மிண்டனாவ் தீவில் இருந்து ஜோலோ தீவுக்கு ராணுவ வீரர்கள் இன்று ராணுவ விமானத்தில் வந்தனர். விமானம் ஜோலோ தீவில் தரையிறங்குவதற்கான சிக்னல் கிடைத்தது. ஆனால், தரையிறங்கும் முயற்சியின்போது, ஓடுபாதையை தவறவிட்டதால் விமானம் சிறிது தூரத்திற்கு சென்று தரையில் மோதியது.
மோதிய வேகத்தில் விமானம் உடைந்து தீப்பிடித்தது. விமானம் கட்டுப்பாட்டை இழந்து தரையில் மோதப்போகிறது என்பதை அறிந்த சில வீரர்கள், அவசரகால வாசல் வழியாக வெளியே குதித்துள்ளனர்.
விபத்து நடந்த பகுதிக்கு மீட்புக்குழுவினர் விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். 29 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டன. மேலும் 50 பேர் காயங்களுடன் மீட்கப்பட்டனர். 17 பேரை காணவில்லை. அவர்களைத் தேடும் பணி நடைபெறுகிறது. இந்த விபத்து குறித்து விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.
விபத்துக்குள்ளான விமானம் சி-130 ஹெர்குலஸ் போக்குவரத்து விமானம் ஆகும். இந்த வகை விமானங்கள் பல ஆண்டுகளாக, உலகம் முழுவதிலும் உள்ள விமானப்படைகளால் பயன்படுத்தப்படுகின்றன. படை வீரர்கள், பொருட்கள் மற்றும் வாகனங்களை கொண்டு செல்ல இந்த விமானங்கள் பயன்படுத்தப்படுகின்றன. மேலும் மனிதாபிமான உதவிகள் வழங்கவும், பேரழிவு காலங்களில் நிவரணப் பொருட்களை கொண்டு செல்லவும் இந்த விமானத்தை பயன்படுத்துகிறார்கள்.
பிலிப்பைன்சில் அதிக உயிரிழப்பை ஏற்படுத்திய ராணுவ விமான போக்குவரத்து விபத்துகளில் இதுவும் ஒன்றாகும். இந்த ஆண்டின் நான்காவது விபத்து என செனட்டர் ரிச்சர்ட்ஸ் கார்டன் கூறி உள்ளார். மேலும், நாம் மக்களின் வரிப்பணத்தில் குறைபாடுள்ள விமானங்களை வாங்குகிறோமா? என்றும் கேள்வி எழுப்பினார்.