இராணுவ வைத்தியசாலைகளில் நாளை முதல் கொவிட் தடுப்பூசி
தெரிவு செய்யப்பட்ட சில இராணுவ வைத்தியசாலைகளில் நாளை முதல் கொவிட் தடுப்பூசி வழங்கும் நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளதாக இராணுவ தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.அதனடிப்படையில் மேல் மாகாணத்தில் 30 வயதிற்கு மேற்பட்ட எந்தவொரு நபருக்கும் வார நாட்களில் காலை 8.30 மணி மதல் 4.30 மணி வரையில் குறித்த வைத்தியசாலைகளில் தடுப்பூசியின் முதல் டோஸ் அல்லது இரண்டாவது டோஸை செலுத்திக் கொள்ள முடியும் என தெரிவிக்கப்படுகின்றது.நாரஹேன்பிட்ட, பனாகொட மற்றும் வேரஹெர பகுதிகளில் உள்ள இராணுவ வைத்தியசாலைகளிலும் பொரள்ள குவன்புர, கட்டுநாயக்க, இரத்மலான மற்றும் ஏகல பகுதிகளில் உள்ள விமானப்படை வைத்தியசாலைகளிலும் வெலிசல மற்றும் கொழும்பு சைத்திய வீதியில் உள்ள கடற்படை வைத்தியசாலைகளிலும் இவ்வாறு தடுப்பூசி செலுத்திக் கொள்ள முடியும் என தெரிவிக்கப்படுகின்றது.அத்துடன் மேல் மாகாணத்தை தவிர்ந்த ஏனைய மாகாணங்களில் உள்ள 60 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கும் சில இராணுவ வைத்தியசாலைகள் ஊடாக தடுப்பூசி செலுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.அதனடிப்படையில் காலி கோட்டை, மாத்தறை நில்வலா முகாம், தியதலாவ, அநுராதபுரம், கிளிநொச்சி, யாழ்ப்பாணம் மற்றும் முல்லைத்தீவு ஆகிய இராணுவ வைத்தியசாலைகளில் இவ்வாறு தடுப்பூசி செலுத்திக் கொள்ள முடியும் என தெரிவிக்கப்படுகின்றது. ஜனாதிபதியின் அறிவுரைக்கு அமைய இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.