நாம் எமது மக்களை பாதுகாத்துக் கொள்வோம் - பிரதமர்
கொவிட் தொற்றை காரணம் காட்டி நாம் இல்லை, முடியாது என்றிருந்தால் மக்கள் இதனைவிட பெரும் இன்னல்களுக்கு முகங்கொடுக்க நேரிடும் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இன்று (2) அலரி மாளிகையில் வைத்து தெரிவித்தார்.
445 மில்லியன் ரூபாய் மற்றும் 127 மில்லியன் ரூபாய் செலவில் நிர்மாணிக்கப்பட்ட தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் கபுதுவ பரிமாற்ற நுழைவாயில் மற்றும் பேராதனை போதனா வைத்தியசாலையின் முன்னால் சுரங்க வழி பாதசாரிகள் கடவை ஆகியவற்றை திறந்து வைத்த பிரதமர், 4999 மில்லியன் ரூபாய் செலவில் கோட்டை லோட்டஸ் வீதியில் 17 மாடிகளை கொண்டதாக நிர்மாணிக்கப்படும் ´கடல்சார் வசதி மையத்தின்´ நிர்மாணப் பணிகளை ஆரம்பித்துவைத்த போதே இவ்வாறு குறிப்பிட்டார்.
கபுதுவ பரிமாற்றத்தின் நிர்மாணப் பணிகள் 5 மாதங்கள் என்ற குறுகிய காலத்திற்குள் நிறைவுசெய்யப்பட்டமை விசேடம்சமாகும். பேராதனை சுரங்க வழி பாதாசாரிகள் கடவை 12 மாதங்களில் நிறைவுசெய்யப்பட்டது. இன்று நிர்மாணப் பணிகள் ஆரம்பிக்கப்பட்ட கடல்சார் வசதி நிலையத்தை 24 மாதக் காலப்பகுதிக்குள் நிறைவுசெய்ய எதிர்பார்க்கப்படுகிறது.
இதன்போது பிரதமர் ஆற்றிய முழுமையான உரை வருமாறு, நாம் நாட்டின் அபிவிருத்தி குறித்து கதைக்கும்போது அந்நாட்டின் உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் சாலை அமைப்பு குறித்து விசேட கவனம் செலுத்துவோம்.
அதேபோன்று உள்நாட்டு உற்பத்தி பொருளாதாரத்தை பலப்படுத்த வேண்டுமாயின் நிச்சயமாக நாட்டின் சாலை அமைப்பை அபிவிருத்தி செய்ய வேண்டும். அதிவேக நெடுஞ்சாலை அமைப்பின் வசதியை அனுபவிக்கும் மக்கள் அதனை நன்கு அறிவார்கள். அன்று கஷ்டமான பிரதேசங்கள் என கைவிடப்பட்ட எத்தனை கிராமங்கள் இந்த அதிவேக நெடுஞ்சாலை அமைப்பின் ஊடாக அபிவிருத்தி செய்யப்பட்டுள்ளன? அந்த மக்கள் இன்று வைத்தியசாலைக்கு செல்வது, தமது அறுவடைகளை விற்பனை செய்வது, நகருடன் தொடர்புபடுவது அனைத்தும் இந்த அதிவேக நெடுஞ்சாலை ஊடாகவாகும்.
அதுமாத்திரமன்றி பல தசாப்தங்கள் காணாத அபிவிருத்தியை கிராமத்திற்கு கொண்டு செல்வதற்கான ஒரு மார்க்கமாக மக்கள் இந்த அதிவேக நெடுஞ்சாலை அமைப்பை காண்கின்றனர்.
இன்று மக்கள் மயப்படுத்தப்பட்டுள்ள தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் கபுதுவ பரிமாற்றம் ஆரம்ப திட்டத்தில் காணப்படவில்லை. அம்மக்கள் தொடர்ந்து பரிமாற்ற நுழைவாயில் கோருவதாக அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, அமைச்சர் லன்சாவுடன் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் வந்து என்னிடம்; தெரிவித்தார்.
அதனால் இது தொடர்பில் ஆராய்ந்து அப்பிரதேச மக்களின் தேவையை நிறைவேற்றுமாறு தெரிவித்தோம். எவ்வித சொத்து கையகப்படுத்தலையும்; மேற்கொள்ளாது இன்று அம்மக்களின் எதிர்பார்ப்பை ஐந்து மாதங்கள் என்ற குறுகிய காலப்பகுதிக்குள் நிறைவேற்ற எமக்கு முடிந்துள்ளமை குறித்து மகிழ்ச்சி அடைகின்றோம்.
அதற்கு அர்ப்பணிப்புடன் செயற்பட்ட அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள் என்று தெரிவித்தார்.