தேனி அருகே மனைவியை கொன்று நாடகமாடிய ராணுவ வீரர் கைது..!
தேனி பாரஸ்ட் ரோடு 12-வது தெருவைச் சேர்ந்த சிவக்குமார் மகன் ஈஸ்வரன்(வயது 26). ராணுவ வீரரான இவருக்கும் மதுரை மாவட்டம் உசிலம்பட்டி மகாலிங்கபுரத்தைச் சேர்ந்த செல்வம் மகள் கிரிஜா பாண்டி (24) என்பவருக்கும் கடந்த 2018-ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது.
திருமணமான ஒரே வருடத்தில் கிரிஜா பாண்டி தனது கணவர் ஈஸ்வரன் மீது உசிலம்பட்டி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் ஈஸ்வரன் மீது வழக்கு பதிவு செய்தனர்.
அதன் பிறகு சென்னை ரெஜிமெண்ட் ராணுவ படையில் பணிபுரிந்து வந்த ஈஸ்வரன் தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டார். அதன் பிறகு கணவன்-மனைவியை சமாதானம் செய்த இரு குடும்பத்தினரும் தேனியில் சேர்ந்து வாழுமாறு கூறியுள்ளனர்.
அதன் பிறகு அவர்களுக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டது. இனிமேல் உனது குடும்பத்தினரை பார்க்க கூடாது என்று கிரிஜா பாண்டியிடம் ஈஸ்வரன் கூறியுள்ளார். அதன் பிறகு இருவரும் வீட்டை காலி செய்து விட்டு சென்று விட்டனர்.
தனது மகளிடம் இருந்து எந்த தகவலும் கிடைக்காததால் சந்தேகமடைந்த செல்வம் தேனிக்கு வந்து விசாரித்துள்ளார். ஆனால் அவர்கள் எங்கு இருக்கின்றனர்? என்பதே தெரியாமல் இருந்துள்ளது. இது குறித்து தேனி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் செல்வம் புகார் அளித்தார்.
சப்-இன்ஸ்பெக்டர் கார்த்திகேயன் தலைமையில் தனிப்படை போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். ஈஸ்வரன் நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் பதுங்கி இருப்பதாக தகவல் கிடைக்கவே அங்கு சென்று அவரை தேனிக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர். இதில் கடந்த 2019-ம் ஆண்டு டிசம்பர் 25-ம் தேதியன்று தனக்கும் தனது மனைவிக்கும் தகராறு ஏற்பட்டதாகவும், இதில் ஆத்திரமடைந்து அவரை தாக்கியதால் இறந்து விட்டார் என்றும் போலீசிடம் தெரிவித்தார்.
அதன் பிறகு பழனி போலீஸ் பட்டாலியனில் பணிபுரிந்து வரும் தனது சகோதரரான சின்ன ஈஸ்வரனுடன் சேர்ந்து கிரிஜா பாண்டியின் உடலை சாக்கு பையில் போட்டு முல்லை பெரியாற்றில் வீசி விட்டதாக அவர் தெரிவித்தார்.
இதனையடுத்து ஈஸ்வரனை போலீசார் கைது செய்து தனது மனைவியின் உடலை வீசிய இடத்தை அடையாளம் காட்டுமாறு கூறினர். அவர் அடையாளம் காட்டிய இடத்தில் அன்றைய தினம் ஏதேனும் உடல்கள் கண்டுபிடிக்கப்பட்டதா? என்று தீயணைப்பு துறையினர் மற்றும் போலீசாரிடம் தகவல்கள் சேகரிக்கப்பட்டு வருகிறது.
மனைவியை கொலை செய்து விட்டு நாடகமாடிய கணவர் 2 வருடத்துக்கு பிறகு கைது செய்யப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இந்த கொலைக்கு உடந்தையாக இருந்த சின்ன ஈஸ்வரனையும் தேனிக்கு வரவழைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். அவர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.