தமிழ்நாட்டின் கள்ளக்குறிச்சி சட்டவிரோத மதுபானம் அருந்திய 32 பேர் உயிரிழப்பு - இந்திய ஊடகங்கள் தகவல்
தமிழ்நாட்டின் கள்ளக்குறிச்சியில் நேற்று சட்டவிரோத மதுபானம் அருந்திய 32 பேர் இதுவரையில் உயிரிழந்ததாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அத்துடன் 103 பேர் வரை கள்ளக்குறிச்சி, புதுச்சேரி மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதாகவும் பலரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கள்ளக்குறிச்சி - கருணாபுரம் பகுதியில் விற்பனை செய்யப்பட்ட சட்டவிரோத மதுபானத்தினை அருந்தியவர்கள் வாந்தி, வயிற்று வலி, வயிற்றெரிச்சல் போன்ற பிரச்சினைகளால் திடீரென பாதிக்கப்பட்டனர்.
இதனையடுத்து அவர்கள் கள்ளக்குறிச்சி அரச மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
கள்ளக்குறிச்சியை அடுத்த மாதவச்சேரி பகுதியிலும் மதுபானம் அருந்திய பலர் உடல்நலம் பாதிக்கப்பட்டு, மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர்.
இதன்போது மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், அவர்கள் சட்டவிரோத மதுபானம் அருந்தியமை தெரியவந்துள்ளது.
சட்டவிரோத மதுபான விற்பனையில் ஈடுபட்டதாகக் கூறப்படும் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சிகிச்சைப் பெற்று வருபவர்களில் பலர் ஆபத்தான நிலையில் உள்ளதாகவும், உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் எனவும் இந்தியச் செய்திகள் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது
000