கரடிகளை இனி வேட்டையாடினால் மானியம் - அதிரடியாக அறிவித்தது ஜப்பான் நாட்டு அரசாங்கம்
ஜப்பான் அரசு வேட்டையாடக்கூடிய விலங்குகளின் பட்டியலில் கரடிகளை சேர்த்துள்ளது. 2023-24ஆம் நிதியாண்டில் கரடிகள் தாக்கியதில் 219 பேர் பாதிக்கப்பட்டதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
மேற்கு ஜப்பானில் உள்ள ஷிகோகு பகுதியைச் சேர்ந்த கருப்பு கரடிகளை தவிர, பிற கரடிகளை இலையுதிர் காலத்தில் வேட்டையாட அரசு அனுமதி அளித்துள்ளது. கருப்பு கரடிகளின் எண்ணிக்கை அதிகரிக்கவில்லை என்பதால் இந்த பட்டியலில் அவை சேர்க்கப்படவில்லை.
அரசு மானியத்தின் உதவியுடன் வேட்டையாடக்கூடிய விலங்குகளின் பட்டியலில் கரடிகளையும் சேர்த்துள்ளதாக ஜப்பான் தெரிவித்துள்ளது. கருப்பு கரடிகளைத் தவிர பிற கரடிகள் 'வனவிலங்கு மேலாண்மை' பட்டியலில் சேர்க்கப்படுமென ஜப்பான் சுற்றுச்சூழல் அமைச்சகம் அறிவித்துள்ளது. கரடிகளின் எண்ணிக்கை பெருகி மனிதர்களை தாக்கும் சம்பவம் அதிகரித்துள்ள நிலையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆசிய நாடான ஜப்பானில் உள்ள ஹொக்கைடோ பகுதியில் ''ஹிகுமா'' எனும் பழுப்பு நிற கரடிகள் வாழ்கின்றன. அதேபோல் ''சுகினோவாகுமா'' எனும் ஆசிய கருப்பு கரடிகள் நாட்டின் 47 மாகாணங்களில் 33 மாநிலங்களில் வாழ்கின்றன. 2023ஆம் ஆண்டில் 219 பேர் கரடி தாக்குதலுக்கு உள்ளாகினர். இது இதுவரை பதிவு செய்யப்படாத அதிகபட்சமாகும். அத்துடன் கரடிகள் தாக்குதலில் 6 பேர் கொல்லப்பட்டனர். இதனைத் தொடர்ந்து கடந்த ஒரு ஆண்டில் பிடிபட்ட கரடிகளின் எண்ணிக்கை 9,319 ஆக உயர்ந்தது.